
அல்லு அர்ஜுனுக்கு இடைக்காலப் பிணை வழங்கி தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புஷ்பா 2 வெளியீட்டின்போது, சந்தியா திரையரங்கில் அல்லு அர்ஜுனைக் காண கூடிய கூட்டத்தின் நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில் அல்லு அர்ஜுன் 14 நாள்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
சிக்கட்பள்ளி காவல் துறையினர் அல்லு அர்ஜுனை இன்று கைது செய்தார்கள்.
புஷ்பா முதல் பாகம் வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா 2 படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. டிசம்பர் 4 அன்று இந்தப் படம் வெளியானது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியை ரசிகர்களுடன் காண அல்லு அர்ஜுன் ஹைதராபாதிலுள்ள சந்தியா திரையரங்குக்கு வருகை தந்திருந்தார்.
அப்போது ஏராளமான ரசிகர்கள் திரையரங்கில் கூடினார். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இவருடைய மகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
புஷ்பா 2 படக் குழுவினர் திரையரங்குக்கு வருவது குறித்து காவல் துறையினரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, சந்தியா திரையரங்கு நிர்வாகம், அல்லு அர்ஜுன் மற்றும் அவருடையப் பாதுகாப்புக் குழுவினர் மீது சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், அல்லு அர்ஜுன் இன்று காலை சிக்கட்பள்ளி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, இவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுனின் சட்ட நிபுணர்கள் குழு தெலங்கானா உயர் நீதிமன்றத்தை நாடியது.
இதனிடையே, கீழமை நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அங்கு இவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
ஆனால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சில மணி நேரத்தில் அல்லு அர்ஜுனுக்கு இடைக்காலப் பிணை வழங்கி தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.