
பிரபல இந்திய பாடகியான அல்கா யாக்னிக், அரியவகை செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஹிந்தியில் ஏக் தோ தீன், சோலி கே பீச்சே கியாஹே உட்பட 20000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் அல்கா யாக்னிக். 2 தேசிய விருதுகளை வென்ற இவர், 2022-ல் யுடியூபில் 15.3 பில்லியன் பார்வைகள் பெற்று, கின்னஸ் உலக சாதனையில் 'உலகில் அதிக நபர்களால் கேட்கப்பட்ட பாடகர்' என அங்கீகரிக்கப்பட்டார்.
கடந்த 40 ஆண்டுகளாக பாடிவரும் அல்கா யாக்னிக் ஓரம்போ படத்தில் இடம்பெற்ற இது என்ன மாயம் உட்பட சில தமிழ் பாடல்களையும் பாடியுள்ளார்.
தால், லகான், குச் குச் ஹோத்தா ஹே, கில்லாடி 420, தீவானா உட்பட பல பிரபலமான படங்களில் இடம்பெற்ற பாடல்களையும் பாடியுள்ளார்.
இந்நிலையில் இவர் அரியவகை செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
“சில வாரங்களுக்கு முன்பு, நான் ஒரு விமானத்திலிருந்து வெளியேறும் போது என்னால் எதையும் கேட்கமுடியவில்லை என்பதை உணர்ந்தேன். வைரல் தாக்குதலால் அரியவகை செவித்திறன் குறைபாடு ஏற்பட்டு, எனது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதற்கான சிகிச்சை பெற்று வருகிறேன்.
என் ரசிகர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகமாக சத்தத்தை வைத்து ஹெட்போன்களில் இசையை கேட்கவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறேன். நான் விரைவில் குணமடைய பிரார்த்திக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.