நடிகர் அஜித்தின் கார் பந்தய அணி இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் பந்தயத்தில் அவர் ஓட்டுநராகவும் இருந்துள்ளார்.
அஜித் குமார் ரேஸிங் என்ற கார் பந்தய அணியைத் தொடங்கிய அஜித் துபாயில் நடைபெற்ற 24 ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில் பங்கேற்றார். அணியின் உரிமையாளராக மட்டுமில்லாமல் ஜிடி3 கார் பந்தயத்தில் ஓட்டுநராகவும் அவர் பங்கேற்றார்.
பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக போர்ஷ் 992 கப் போட்டியிலிருந்து ஓட்டுநராகப் பங்கேற்காமல் அஜித் விலகினார். எனினும், அவருடைய அணி இந்தப் பந்தயத்தில் பங்கேற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அஜித்துக்கு இந்த வெற்றி பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது. தேசியக் கொடியுடன் வலம் வந்து நாட்டுக்குப் பெருமை சேர்த்தார்.
இதன் தொடர்ச்சியாக இத்தாலியில் நடைபெற்ற மிஷெலின் 12ஹெச் முஜெல்லோ கார் பந்தயத்தில் அஜித்தின் அணி பங்கேற்றது. 991 - போர்ஷ் 911 ஜிடி3 கோப்பை (992) பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி போட்டியிட்டது.
இதிலும் அஜித்துடைய அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. மூன்றாவது இடத்தைப் பிடித்ததற்கான பரிசளிப்பு விழாவில் அஜித் தேசியக் கொடியுடன் சென்றார். தனது வீரர்களுடன் குளிர்பானத்தைப் பீய்ச்சி அடித்து அஜித் வெற்றியைக் கொண்டாடினார். வெற்றி பெற்ற இந்த கார் பந்தயத்தில் அஜித் ஓட்டுநராகவும் இருந்துள்ளது கூடுதல் சிறப்பம்சம்