வேட்டையன் படத்துக்கு பிறகு இயக்குநர் ஞானவேல், சரவண பவன் ராஜகோபால் - ஜீவஜோதி வழக்கை அடிப்படையாக கொண்டு புதியப் படத்தை இயக்கவுள்ளார்.
‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேட்டையன்’.
இப்படத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் போன்ற பலரும் நடித்துள்ளனர். இசை - அனிருத்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் அக்டோபர் 10 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேட்டையன் படத்துக்கு பிறகு இயக்குநர் ஞானவேல், மறைந்த சரவண பவன் ராஜகோபால் - ஜீவஜோதி வழக்கை அடிப்படையாக கொண்டு புதியப் படத்தை இயக்கவுள்ளார்.
‘தோசா கிங்’ என்று தலைப்பிடப்பட்ட இப்படம் குறித்த அறிவிப்பு 2022-ல் வெளியானது. இப்படத்துக்கு ஞானவேலுடன் இணைந்து திரைக்கதை எழுதுகிறார் ஹேமந்த் ராவ்.
இப்படத்தை ஜங்லி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக 2022-ல், “நான் பத்திரிகையாளராக இருந்த நாட்களில் சரவண பவன் ராஜகோபால் - ஜீவஜோதி வழக்கைப் பின்பற்றி இந்தக் கதையை உன்னிப்பாக கவனித்தேன். ஜீவஜோதியின் சட்டப் போராட்டத்தைத் திரையில் காண்பிப்பதன் மூலம் புதிய பரிமாணங்களைக் வெளிக்கொண்டுவருவேன் என நம்புகிறேன்.” என்று ஞானவேல் தெரிவித்திருந்தார்.