
ஆடுஜீவிதம் படத்துக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்படாதது உள்பட தேசிய திரைப்பட விருதுகள் குழு மீது நடிகை ஊர்வசி பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ளார்.
71-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் 1 அன்று மாலை அறிவிக்கப்பட்டது. தமிழில் பார்க்கிங் படம் மூன்று விருதுகளை அள்ளியது.
தேசிய விருது அறிவிக்கப்பட்டதில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அட்லி இயக்கிய ஜவான் படத்துக்காக ஷாருக்கான் மற்றும் 12th Fail படத்துக்காக விக்ராந்த் மாஸ்ஸி ஆகியோர் வென்றார். பெரும் சர்ச்சையைக் கிளப்பிய தி கேரளா ஸ்டோரி படம் இரு தேசிய விருதுகளை அள்ளியது. அதேசமயம், பிரித்விராஜின் ஆடுஜீவிதம் படத்துக்கு ஒரு விருதுகூட அறிவிக்கப்படவில்லை. உள்ளொழுக்கு படத்துக்காக நடிகை ஊர்வசிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேசிய விருது அறிவிக்கப்பட்டது பற்றி ஊர்வசி பல்வேறு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தி நியூஸ் மினிட் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "தனது கதாபாத்திரத்துக்காக உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தன்னால் முடிந்த அனைத்தையும் ஒரு நடிகர் செலுத்தியிருக்கிறார். வலியுடன் வாழ்ந்திருக்கிறார். ஆனால், அப்படத்தைப் புறக்கணித்துள்ளார்கள். எம்புரான் தான் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். விருதுகள் அரசியலாக்கப்படக் கூடாது" என்றார் ஊர்வசி.
மோகன்லாலை வைத்து எம்புரான் படத்தை இயக்கியிருந்தார் பிரித்விராஜ். 2002 குஜராத் வன்முறைகளைக் குறிப்பிடும் காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்தன. வலதுசாரியினர் இப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். மோகன்லால் இதுதொடர்பாக மன்னிப்பையும் கேட்டிருந்தார்.
ஏசியாநெட் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், "சிறந்த நடிகருக்கான அளவுகோல் என்ன? எதன் அடிப்படையில் ஷாருக்கான் தேர்வு செய்யப்பட்டார்? விஜயராகவன் போன்ற நடிகர்கள் ஏன் துணை நடிகருக்கான விருதை வெல்கிறார்கள்? பூக்கோலம் படத்தில் விஜயராகவன் பலமணி நேரம் மேக்கப் செய்ய நேரம் எடுத்துக்கொண்டு, ஆத்மார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அது எப்படி முன்னணி நடிகராக இல்லாமல்போகும்? பூக்கோலம் படத்துக்குத் தீவிர மேக்கப் தேவைப்படும் என்பதால், அப்படத்தில் நடிக்க நான் மறுத்தேன். மேக்கப்புக்கு 9 மணி நேரம் வரை தேவைப்படும். கோடிகள் கொடுத்தால்கூட நான் அதைச் செய்ய மாட்டேன். ஆனால், விஜயராகவன் அதைச் செய்தார், இருந்தாலும் கவனத்தில்கொள்ளப்படவில்லை. இது சரியல்ல" என்றார் ஊர்வசி. விஜயராகவன் பற்றி நியூஸ் மினிட்டில் பேசும்போது, பூக்கோலம் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தும்கூட ஏன் துணை நடிகர் விருது மட்டுமே அவருக்கு அறிவிக்கப்பட்டது என்று கேள்வியெழுப்பியிருந்தார் ஊர்வசி.
மேலும், "தென்னிந்தியாவில் பல திறமையான நடிகர்கள் உள்ளார்கள். நாம் தற்போது குரல்களை எழுப்பாவிட்டால், அவர்களுக்கான அங்கீகாரம் தொடர்ந்து கிடைக்காமல் போகும். முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையில் மட்டுமே தேசிய விருதுகள் வழங்கப்பட வேண்டும்" என்றார் அவர்.
"எனக்குக் கிடைக்கும் பதிலைப் பொறுத்தே தேசிய விருதைப் பெறலாமா வேண்டாமா என்று முடிவு செய்வேன். இதுவரை என்னை அழைத்து யாரும் விளக்கம் கொடுக்கவில்லை, ஏன் இதை எழுப்புகிறேன் என்று கேட்கவும் இல்லை" என்று தி நியூஸ் மினிட்டுக்குப் பேட்டியளித்துள்ளார் ஊர்வசி.
மனோரமா செய்திகளுக்கு அளித்த பேட்டியில், "விருதுகளை அமைதியாகப் பெற்றுக்கொள்ள இது ஓய்வூதியம் கிடையாது" என்றார் ஊர்வசி.
தமிழுக்குக் கிடைத்த விருதுகள்
சிறந்த தமிழ்ப் படமாக பார்க்கிங் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த திரைக்கதைக்கான விருது பார்க்கிங் படத்துக்காக ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டது. இதே படத்தில் நடித்த எம்எஸ் பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. வாத்தி படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான (பாடல்கள்) விருது ஜி.வி. பிரகாஷுக்கு அறிவிக்கப்பட்டது.
National Awards | National Film Awards | 71st National Film Awards | 71st National Awards | Urvashi | Actress Urvashi