

பிரபல நடிகை துளசி இந்த ஆண்டு டிசம்பர் 31-க்குப் பிறகு திரைத்துறையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த 1967-ல் பிறந்த நடிகை துளசி தமிழ், தெலுங்கு, கன்னடம், போஜ்பூரி உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அவருக்கு வயது 58. தமிழில் 1973-ல் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் ’அரங்கேற்றம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக துளசி நடித்திருந்தார். 1984-ல் ரஜினி நடிப்பில் வெளியான ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார். அதுமட்டுமன்றி கமல் ஹாசன், சிரஞ்சீவி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் துளசி நடித்துள்ளார்.
தனது 28 வயதில் கன்னட இயக்குநர் சிவமணியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டபின் நடிப்பிலிருந்து விலகியிருந்தார். பின்னர் மீண்டும் 2003-ல் கன்னட படத்தில் அம்மா கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அதன்பின்னர் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துக் கவனம் ஈர்த்தார். ஆந்திர திரைத்துறையின் உயர்ந்த விருதான நந்தி விருதை இருமுறை வென்றிருக்கிறார். தொலைக்காட்சித் தொடர்களிலும் துளசி நடித்துள்ளார்.
கடந்த 2014-ல் இவர் நடிப்பில் வெளியான பண்ணையாரும் பத்மினியும் படம் துளசிக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மேலும், மங்காத்தா, சர்க்கார், ஆம்பள, வீரமே வாகை சூடு, வெந்து தணிந்தது காடு, சபாநாயகன் உள்ளிட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஆரோமலே படத்திலும் துளசி நடித்திருந்தார். பெரும்பாலும் அம்மா கதாபாத்திரங்களில் துளசி நடித்துவந்தார்.
இந்நிலையில், வரும் டிசம்பர் 31-க்குப் பிறகு திரைத்துறையிலிருந்து ஓய்வு பெற்று ஆன்மிகப் பாதையில் தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்க உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஷீரடி சாய்பாபாவுக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, அமைதியின் பாதையில் செல்ல விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Actress Tulasi has announced her retirement from the film industry after December 31st of this year.