திரைத்துறையை விட்டு போனது ஏன்?: ‘பூவே உனக்காக’ சங்கீதா விளக்கம் | Kalidas 2 | Sangita |

25 ஆண்டுகளாக ஆண்டுகளாக வீட்டில் சீக்கிரம் சாப்பிட்டு, சீக்கிரம் தூங்கி, ராணி போல் சொகுசாக இருந்து பழகிவிட்டேன்.
நான் திரைத்துறையை விட்டு எங்கேயும் போகவில்லை: ‘பூவே உனக்காக’ சங்கீதா பேச்சு
காளிதாஸ் 2 இசை வெளியீட்டு விழாவில் ‘பூவே உனக்காக’ சங்கீதா
2 min read

தமிழில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்க வந்திருக்கும் ‘பூவே உனக்காக’ சங்கீதா, தான் திரைத்துறையை விட்டு எங்கேயும் போய்விடவில்லை என்று பேசினார்.

இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கி பரத் நடிப்பில் கடந்த 2019-ல் வெளியான காளிதாஸ் படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து காளிதாஸ் 2 படம் உருவாகியுள்ளது. க்ரைம் த்ரில்லர் படமான காளிதாஸ் 2 படத்தில் பரத், பவானி ஸ்ரீ, அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.

மீண்டும் ‘பூவே உனக்காக’ சங்கீதா

விஜயின் பூவே உனக்காக, உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்த 90-களின் நாயகி சங்கீதா இப்படத்தில் நடித்துள்ளார். கடந்த 2000-ல் வெளியான கண் திறந்து பாரம்மா என்ற படம்தான் இவர் கடைசியாக நடித்த தமிழ்ப்படம். தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வந்த இவர், தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காளிதாஸ் 2 படத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் ஸ்ரீ செந்திலுக்கு நன்றி

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் சங்கீதா கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

அரங்கில் இருக்கும் எல்லாரையும் விட சந்தோஷமாக இருப்பது நான்தான். 25 ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு ரொம்ப பிடித்த தமிழ் சினிமாவில் ஒரு படம் செய்திருக்கிறேன். அது விரைவில் வெளியாகப்போகிறது என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய முதல் நன்றி இயக்குநர் ஸ்ரீ செந்திலுக்கு. என்னை நம்பி, தேடிவந்து இந்தக் கதையில் நடிக்க வைத்ததற்கு நன்றி.

வீட்டில் ராணி போல் இருந்தேன்

தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. இத்தனை ஆண்டுகளாக வீட்டில் சீக்கிரம் சாப்பிட்டுத் தூங்கி ராணி போல் சொகுசாக இருந்து பழகிவிட்டேன். ஆனால் சொகுசு வட்டத்தை விட்டு வெளியில் வந்தால்தான் அடுத்த கட்டத்திற்குப் போக முடியும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தின் தயாரிப்பின்போது எனக்கு எந்தவிதமான அசௌகரியமும் இன்றி பார்த்துக் கொண்டார்கள். இவர்களுக்கு அடுத்தடுத்து நிறைய வெற்றிப் படங்கள் கிடைக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். பெரும்பாலும் இரவில் தான் படப்பிடிப்பு நடந்தது. நான் இரவு சீக்கிரம் தூங்கிப் பழக்கப்பட்டவள். அதனால் இரவில் விழித்திருக்கச் சிரமமாக இருந்தது. ஆனாலும் ஒளிப்பதிவாளர் சுரேஷ் இரவில் அவ்வளவு வேலையிலும் புத்துணர்ச்சியுடன் இருப்பார். அதைப் பார்த்து எனக்கும் விழித்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

எளிமையான மனிதர் நடிகர் பரத்

படப்பிடிப்புக்கு முதன்முறை வந்தபோது நான் இறுக்கமாக உணர்ந்தேன். பெரிய இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்ததால் கொஞ்சம் பதற்றமாகவே இருந்தது. அங்கிருந்த எல்லோரும் மூத்த நடிகர்கள் போலவே தெரிந்தார்கள். நான் உள்ளே போனதும் எனக்கு பிடித்த பாடல் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அதை கேட்டுக் கொண்டிருந்தது பரத். அவருடன் பழக மிகவும் எளிமையாக இருந்தது. படத்தின் கடைசி காட்சி எடுத்தபோது பேருந்துக்கு நேரமாகிறது என்றார். என்ன என்று கேட்டதற்கு சென்னையில் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பேருந்தில் செல்ல வேண்டும் என்றார். அவ்வளவு எளிமையான மனிதர் பரத். அவருடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம்.

திரைத்துறையை விட்டு வெளியே போய்விடவில்லை

நான் திரையுலகை விட்டு எங்கேயும் சென்று விடவில்லை. என் கணவர் திரைத்துறையில் இருந்தார். அதனால் எனக்கு திரைத்துறையை விட்டுப் போனது போலவே தோன்றவில்லை. வீட்டு வேலைகள் இருந்ததால் மீண்டும் நடிக்க வருவதற்குக் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது அவ்வளவுதான்” என்றார்.

Summary

Actress 'Poove Unakaaga' Sangita re-appears in Tamil after 25 years in Kalidas 2

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in