தமிழிலும் அர்ப்பணிப்புள்ள கலைஞர்கள் இருக்கிறோம்: மாரி செல்வராஜுக்கு நடிகை ஆராத்யா பதில் | Mari Selvaraj |

ஓடும் குதிரையில் பந்தயம் கட்டத்தான் அனைவரும் தயாராக இருக்கிறார்கள்...
இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நடிகை ஆராத்யா பதில்
இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நடிகை ஆராத்யா பதில்
1 min read

தமிழிலும் அர்ப்பணிப்புள்ள கலைஞர்கள் இருக்கிறோம். உங்கள் பார்வைக்கு வந்து சேரவில்லை என்று இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நடிகை ஆராத்யா பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் இயக்குநர் மாரி செல்வராஜிடம் உங்கள் படங்களில் தொடர்ச்சியாக மலையாள நடிகைகளுக்கு மட்டுமே வாய்ப்பளிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அர்ப்பணிப்புடன் இருக்கும் கலைஞர்களை நான் தேர்தெடுக்கிறேன். அவர்கள் மலையாள நடிகைகள் என்று எல்லாம் பார்ப்பதில்லை” என்றார்.

இந்நிலையில் இதற்குப் பதில் சொல்லும் வகையில் நடிகை ஆராத்யா பேசினார். சென்னையில் அறிமுக இயக்குநர் ஏ.எஸ். முகுந்தன் இயக்கத்தில் நடிகர் ஆனந்த்ராஜ், நடிகை சம்யுக்தா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள மெட்ராஸ் மாஃபியா கம்பெனி படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் கலந்துகொண்ட நடிகை ஆராத்யா பேசியதாவது:-

“படத்தில் நான் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக நடித்திருக்கிறேன். இயக்குநர் நினைத்திருந்தால் ஹிந்தி நடிகை யாரையாவது அழைத்திருக்கலாம். ஆனால் தமிழ் முகமாக ஆங்கிலோ இந்தியன் கதாபாத்திரத்திற்கு வேண்டும் என்று எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார். பொதுவாகவே இங்கு கதாநாயகிகளுக்கு எழுதப்படாத விதி ஒன்று வைத்துள்ளார்கள். நாயகிகள் 25 வயதுக்குள்தான் இருக்க வேண்டும். திருமணம் ஆகியிருக்கக் கூடாது. காதலர்கள் இருக்கக் கூடாது என்றெல்லாம் சொல்கிறார்கள்.

சமீபத்தில் கூட இயக்குநர் மாரி செல்வராஜ் தனது பேட்டி ஒன்றில், அர்ப்பணிப்புள்ள நடிகையை என் படத்திற்கு நான் தேர்ந்தெடுத்தேன். அவர் மலையாளி என்றெல்லாம் நான் பார்க்கவில்லை என்று கூறியிருந்தார்.

மாரி செல்வராஜ் சார்! தமிழிலும் நாங்கள் அர்ப்பணிப்புள்ள கலைஞர்கள் இருக்கிறோம். நானும் நான்கு படங்கள் நடித்திருக்கிறேன். காந்தி கண்ணாடி படத்தில் கிராமத்துக் கதையில் நடித்திருக்கிறேன். அதற்கு நேர் எதிரான கமர்ஷியல் படமும் செய்திருக்கிறேன். சண்டைக் காட்சியில் நடித்திருக்கிறேன். நாங்களும் எங்களால் முடிந்த அர்ப்பணிப்பைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அது உங்கள் பார்வைக்கு வந்து சேரவில்லை. அதை எப்படிச் சேர்ப்பது என்றும் தெரியவில்லை.

இங்கே அனைவரும் ஓடும் குதிரையில் பந்தயம் கட்டுவதற்குத்தான் தயாராக இருக்கிறார்கள். ஓடுவதற்குத் தயாராக சில குதிரைகள் இருக்கின்றன. ஒருமுறை பந்தயம் கட்டி அது எவ்வளவு தூரம் ஓடுகிறது என்றுதான் பாருங்களேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in