திராவிடம் பற்றி கேட்டால் எனக்குப் பதில் சொல்லத் தெரியாது: விஷால்

"திராவிடத்துக்கு எதிரானவனா என்று யோசிக்கும் அளவுக்கு எனக்கு மூளை இல்லை."
திராவிடம் பற்றி கேட்டால் எனக்குப் பதில் சொல்லத் தெரியாது: விஷால்
2 min read

தவெக மாநாட்டுக்கு அழைப்பு விடுக்காவிட்டாலும், அதில் பங்கேற்பேன் என விஷால் பேட்டியளித்துள்ளார்.

விஜயின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு அக்டோபர் 27 அன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலுள்ள வி. சாலையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, சென்னையில் விஷால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பினார்கள்.

இதைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு விஷால் பதிலளித்ததாவது:

"மாநாட்டுக்கு அழைப்பு வந்தால் செல்வேன். நானும் ஒரு வாக்காளர் தானே. வாக்காளராக அவர் என்ன சொல்லப்போகிறார், மக்களுக்கு என்ன செய்யப்போகிறார் , தற்போது இருக்கும் அரசியல்வாதிகளைவிட, விஜய் என்ன நல்லது செய்யப்போகிறார் என்பதை அறிய ஒரு வாக்காளராக மக்கள் மத்தியில் இருந்து மாநாட்டில் பங்கேற்பேன். இதற்கு எதற்காக அழைப்பு தேவை வேண்டியுள்ளது. விஜய் என்ன பேசப்போகிறார் என்பதை ஓரமாக நின்று வேடிக்கைப் பார்க்க வேண்டியதுதான்.

நாம் வாக்களிக்கிறோம். புதிதாக ஒரு அரசியல்வாதி வருகிறார். அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை நாம் பார்க்கவேண்டும் அல்லவா. என்ன சொல்லப்போகிறார் என்பதைக் கேட்க வேண்டும் அல்லவா. இதைத் தொலைக்காட்சி வாயிலாகப் பார்ப்பதற்குப் பதில் நேரில் சென்று பார்த்தால் நல்லதுதான்.

தவெகவில் இணைவது பற்றி தற்போதைய நிலையில் எதுவும் கூற முடியாது. தவெக முதலில் மாநாட்டை நடத்தி முடிக்கட்டும். தற்போதுதான் அடியெடுத்து வைக்கிறார். அவர் என்ன சொல்லப்போகிறார், செய்யப்போகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். அவர் முதல் அடி எடுத்து வைக்கட்டும்.

அவருடைய செயல்பாடு என்ன, அவர் என்ன நல்லது செய்யப்போகிறார் என்று பார்க்கலாம். 2026-க்கு இன்னும் நேரம் உள்ளது.

தவெகவில் இணைவது பற்றி இவ்வளவு விரைவாக யோசிக்க முடியாது. நான் தவெகவில் இணைகிறேனா இல்லையா என்பது அல்ல.

நான் வாக்களிப்பேன். எனக்குப் பிடித்த அரசியல் தலைவருக்கு வாக்களிப்பேன். தேர்தலன்று வேட்பாளர்கள் பட்டியலில் யாரைப் பிடிக்கிறதோ (அவர்களுக்கு வாக்களிப்பேன்), ஒருவேளை நான்கூட அந்தப் பட்டியலில் இருக்கலாம். எனவே, அதைச் சொல்ல முடியாது.

நான் ஏற்கெனவே ஓர் அரசியல்வாதி. சமூக சேவை செய்யும் அனைவரும் அரசியல்வாதி தான். அரசியல் என்பது ஒரு துறையோ பொழுதுபோக்கோ அல்ல. அதுவொரு சமூக சேவை. மக்களின் பிரதிநிதி. மக்களுக்கு என்ன அடிப்படை தேவையோ அதைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் அரசியல்வாதியின் வேலை.

நான் போகும் வழியில் யாராவது உணவு இல்லாமல் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தால், அவர்களுக்கு நான் உணவு வாங்கிக் கொடுத்தால், நான் ஓர் அரசியல்வாதி. ஆக, நான் ஏற்கெனவே ஓர் அரசியல்வாதிதான். இதற்குத் தனிப்பட்ட படிப்பு எதுவும் இல்லை. யார் நன்றாக சமூக சேவை செய்கிறார்களோ அவர்களெல்லாம் அரசியல்வாதிதான்.

திராவிடத்துக்கு எதிரானவனா என்று யோசிக்கும் அளவுக்கு எனக்கு மூளை இல்லை. என்னைப் பொறுத்தவரை, மூன்று பேருக்கு உணவு கொடுத்தேனா, நான்கு பெண்களுக்குக் கல்வி உதவி செய்தேனா, ஐந்து விவசாயிகளுக்கு போர்வெல் அமைக்க உதவி செய்தேனா.. இப்படிதான் நான் பார்ப்பேன். ஒரு பக்கம் என்னுடைய வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தாலும், இந்தப் பக்கம் இந்த வேலையையும் நான் பார்ப்பேன். அவ்வளவுதான். திராவிடம் பிடிக்கிறது பிடிக்கவில்லை என்றெல்லாம் தயவு செய்து கேட்க வேண்டாம். எனக்குப் பதில் சொல்லத் தெரியாது" என்றார் விஷால்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in