
போதைப்பொருளைப் பயன்படுத்திய வழக்கில் நுங்கம்பாக்கம் காவல் துறையினர் நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரதீப் குமார் என்பவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் ஆயிரம் விளக்கு காவல் துறையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டார். இவர் பெங்களூருவிலிருந்து போதைப்பொருள்களை வாங்கி, சென்னையில் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. பிரதீப்பிடமிருந்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிரசாத் என்பவர் போதைப்பொருள் வாங்கியதாகத் தெரிகிறது. பிரசாத் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இதன் காரணமாக இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
பிரதீப் மற்றும் பிரசாத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்த், பிரசாத்திடமிருந்து போதைப்பொருள் வாங்கியதாகத் தகவல் கிடைத்ததாகத் தெரிகிறது. இதன் அடிப்படையிலேயே காவல் துறையினரின் விசாரணை வளையத்துக்குள் ஸ்ரீகாந்த் வந்துள்ளார்.
காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்திடம் சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியானது.
மருத்துவப் பரிசோதனையில் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.