மருத்துவர்கள் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ: லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த அறிக்கை!

ஸ்ரீயின் நிலை குறித்துப் பரவும் ஊகங்களும், தவறான தகவல்களும் வேதனை அளிக்கின்றன.
மருத்துவர்கள் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ: லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த அறிக்கை!
1 min read

சர்ச்சைக்குரிய வகையில் தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுவந்த நடிகர் ஸ்ரீயின் உடல்நலம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிக்கை ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

முதன்முதலில் சின்னத்திரை நடிகராக ஸ்ரீ (எ) ஸ்ரீராம் நடராஜன் அறிமுகமாகியிருந்தாலும், வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம், இறுகப்பற்று உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

ஸ்ரீ ப்ளூ டிக்ட் என்ற பெயரில் இயங்கிவந்த அவரது இன்ஸ்டகிராம் கணக்கில் அண்மையில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில், அவர் உடல் மெலிந்து காணப்பட்டார். அந்த இன்ஸ்டகிராம் பதிவுகளை முன்வைத்து அவரது செய்கைகள் இயல்பானதாக இல்லை என்றும் அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவை என்றும் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இந்நிலையில் ஸ்ரீயின் நண்பரும், அவரது மாநகரம் படத்தின் இயக்குநருமான லோகேஷ் கனகராஜ், இன்று (ஏப்.18) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்ரீயின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியதாவது,

`தற்போது நடிகர் ஸ்ரீராம் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி சமூக வலைதளங்களில் இருந்து சில காலம் விலகி இருக்கிறார் என்பதை அவரது நலம் விரும்பிகள், நண்பர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

குணமடைவதிலும், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதிலும் அவர் கவனம் செலுத்தி வருவதால், தற்போது அவருக்குத் தனியுரிமை தேவைப்படுகிறது. இதை மதிக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறோம். ஸ்ரீயின் நிலை குறித்துப் பரவும் ஊகங்களும், தவறான தகவல்களும் வேதனை அளிக்கின்றன. மேலும், அவரது உடல்நிலை குறித்த வதந்திகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு இணைய ஊடகங்கள் மற்றும் பிற ஊடகங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

அவரது தற்போதைய நிலை தொடர்பான ஆட்சேபனைக்குரிய காணொளிகள் அல்லது நேர்காணல்களை இணைய ஊடகங்கள் நீக்குமாறும், அவர் குணமடைவதில் கவனம் செலுத்தும்வரும் நேரத்தில் அவரது தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சில நபர்கள் நேர்காணல்களில் வெளிப்படுத்தும் எந்தவொரு கருத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை, அவற்றை முழுவதுமாக மறுக்கிறோம். இந்தத் தருணத்தில் உங்களது தொடர்ச்சியான அன்பு, ஆதரவு மற்றும் புரிதலுக்கு நன்றி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in