மும்பையிலிருந்து புறப்படும் இண்டிகோ விமானம் 4 மணிநேரம் தாமதமானதாக நடிகை ஷ்ருதி ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஷ்ருதி ஹாசன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இன்று நள்ளிரவு, “நான் வழக்கமாக குறை சொல்பவர் அல்ல. ஆனால், இண்டிகோ நிறுவனம் இன்று பயங்கரமான குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. கடந்த 4 மணிநேரமாக எந்த தகவலும் இல்லாமல் விமான நிலையத்தில் தவிக்கிறோம். உங்கள் பயணிகளுக்கு உதவ முன்வருவீர்களா?” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த இண்டிகோ நிறுவனம், “விமானம் தாமதமானதால் ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம். காத்திருப்பது எவ்வளவு சிரமமானது என்பது எங்களுக்கு புரிகிறது. மும்பையில் நிலவும் வானிலை காரணமாக விமானங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எங்கள் விமானக் குழு தேவையான உதவிகளை செய்வார்கள் என உறுதி அளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.