
பிரபல நடிகர் ராஜேஷ் (75) மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் ராஜேஷ். கே. பாலச்சந்தர் இயக்கிய 'அவள் ஒரு தொடர்கதை' படத்தில் சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து திரைத் துறையில் அறிமுகமானார் ராஜேஷ். கன்னிப் பருவத்திலே, அந்த 7 நாள்கள், அச்சமில்லை அச்சமில்லை, இருவர் என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அண்மைக் காலமாக உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார் ராஜேஷ். இந்நிலையில், இன்று காலை திடீரென உடல்நிலை மேலும் மாரடைப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, ராஜேஷ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், மருத்துவமனை கொண்டு வழியிலேயே ராஜேஷின் உயிர் பிரிந்திருக்கிறது.
ராஜேஷின் மறைவு திரையுலகினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருடைய உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ராஜேஷின் மனைவி ஜோன் சில்வியா ஏற்கெனவே காலமாகிவிட்டார். தீபக் மற்றும் திவ்யா என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள்.