
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் இரவு விடுதியொன்றில் கடந்த மே 22 அன்று மது அருந்தச் சென்ற இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் துறை சார்பில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் பிரசாத் என்பவரும் ஒருவர்.
பிரசாத் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இவற்றில் ஒன்று போதைப்பொருள் விற்பனை. இந்த வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் எனும் போதைப்பொருளைப் பெற்று பயன்படுத்தியுள்ளார் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருளைப் பயன்படுத்தியது மருத்துவப் பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. கிருஷ்ணாவுக்கு நுங்கம்பாக்கம் காவல் துறை சார்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று காலை செய்திகள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து, போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கிருஷ்ணாவிடம் ரகசிய இடத்தில் வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது. விசாரணையைத் தொடர்ந்து, போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கிருஷ்ணாவுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள காவல் துறையினர் திட்டமிட்டுள்ளார்கள். மருத்துவப் பரிசோதனையில் போதைப்பொருளை உட்கொண்டது உறுதி செய்யப்பட்டால், நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.