மெய்யழகனில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்?: மனம் திறந்த கார்த்தி

உறவுகளை மையமாகக் கொண்டு ஒரு படம் வெளியாகாதா என்று பலரும் ஏங்கிக்கொண்டிருந்த சமையத்தில்...
கார்த்தி
கார்த்தி
1 min read

மெய்யழகனில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கானக் காரணத்தை நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

‘96’ படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அர்விந்த் சாமி உள்பட பலர் நடித்த படம் ‘மெய்யழகன்’. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. இசை - கோவிந்த் வசந்தா. இப்படம் செப்டம்பர் 27 அன்று வெளியானது.

இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக படத்தின் நீளம் மிகவும் அதிகமாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர். இதன் தொடர்ரச்சியாக மெய்யழகன் படத்தில் 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையிடல் தொடரும் என அண்மையில் இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்தார்.

இந்நிலையில் ‘மெய்யழகன்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கார்த்தி பேசியதாவது

“உறவுகளை மையமாகக் கொண்டு ஒரு படம் வெளியாகாதா என்று பலரும் ஏங்கிக்கொண்டிருந்த சமையத்தில், அப்படி ஒரு கதையை ஒருவர் எழுதியிருந்தார். அந்தக் கதையை எப்படி தவறவிட முடியும். நல்ல படங்களைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்ற அறிவுரையை பலரும் எனக்கு வழங்கியுள்ளீர்கள்.

ஒரு நல்ல கலைப் படைப்புக்கு உதாரணம் அதிகமான உரையாடல்களையும், விவாதங்களையும் ஏற்படுத்துவதுதான். அப்படி பல விஷயங்கள் மெய்யழகனில் இருந்ததுதான், அப்படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம். சினிமா என்பது அனைத்து கலை அம்சங்களையும் கொண்ட கலைப் படைப்பு என்பதை காண்பிக்க, எப்போதாவதுதான் நல்ல படங்கள் அமையும். அப்படி இரு படம்தான் மெய்யழகன்.

இன்றையக் காலக்கட்டத்தில் வேலைக்காக வெளியூர் வந்த பிறகு சொந்தங்கள், கலாச்சாரம் போன்ற விஷயங்களை நாம் மறக்கிறோம் என்ற ஆழமான சிந்தனை நம் மனதுக்குள் இருக்கும். இவை அனைத்தையும் கண் முன் கொண்டுவந்தது மெய்யழகனின் கதை. இந்த எண்ணம் அனைவருக்கும் இருந்தது. எனவே, இப்படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in