
ரோபோ சங்கர் இளம் வயதில் ஸ்டீல் பெயின்ட்டைப் பூசிக்கொண்டு நடித்து, தோல் வலுவிழந்ததால்தான் மஞ்சள் காமாலை ஏற்பட்டது. அவர் அதைக் கவனித்திருக்க வேண்டும் என்று நடிகர் இளவரசு தெரிவித்தார்.
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (செப்.18) இரவு காலமானார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், இளம் வயதில் ஸ்டீட் பெயின்ட்டைப் பூசிக்கொண்டு நடித்ததால் தோல் வலுவிழந்ததால்தான் ரோபோ சங்கர் மரணமடைந்தார் என்று நடிகர் இளவரசு தெரிவித்தார். சென்னை வளசரவாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த ரோபோ சங்கரின் உடலுக்கு நடிகர் இளவரசு அஞ்சலி செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது -
”பொதுவாகத் திரைத்துறையில் ஒருவர் மரணமடைந்தால் அதற்கு மதுதான் காரணம் என்பார்கள். சங்கர் விஷயத்தில், இளம் வயதில் ரோபோவாக நடித்தபோது உடல் முழுக்க ஸ்டீல் பெயின்ட்டைப் பூசிக்கொண்டு நடிப்பார். தினமும் மண்ணெண்ணெய் கொண்டு பெயின்ட்டைத் துடைக்க வேண்டும். அதனால் தோல் வலுவிழந்து, இளம் வயதிலேயே அவருக்கு ஒருமுறை மஞ்சள் காமாலை நோய் வந்தது. இது அப்படியே தொடர்ந்தது. அவர் அதைக் கவனித்திருக்க வேண்டும். உடலைப் பற்றி கவலைப்பட்டால் தானே?”
இவ்வாறு பேசினார்.