கவுண்டமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

கவுண்டமணியின் நிலத்தை அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கவுண்டமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
கவுண்டமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

கவுண்டமணிக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

1996-ல் நளினி பாய் என்பவருக்குச் சொந்தமான சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருந்த நிலத்தை கவுண்டமணி விலைக்கு வாங்கினார். அதனை ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைத்து, அதில் 22700 சதுர பரப்பளவிலான வணிக வளாகத்தை கட்டி முடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கவுண்டமணி 1996 முதல் 1999 வரை ரூ. 1 கோடியே 4 லட்சம் பணத்தை கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், 2003 வரை கட்டுமான பணிகளைத் தொடங்கவில்லை. எனவே இது தொடர்பாக நடிகர் கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இதன் பிறகு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கவுண்டமணியிடம் பெற்ற நிலத்தை அவரிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும், 2008-ம் ஆண்டு முதல், மாதம் ஒன்றுக்கு இழப்பீடாக ரூ. 1 லட்சம் தரவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் கவுண்டமணிக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தனியார் கட்டுமான நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

இதைத் தொடர்ந்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கவுண்டமணியின் நிலத்தை அவரிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in