
ரேணுகாசுவாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்டிருந்த பிணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னட நடிகர் தர்ஷனின் தோழி நடிகை பவித்ரா கௌடாவுக்கு 33 வயது ரேணுகாசுவாமி என்பவர் ஆபாசமான செய்திகளை அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ரேணுகாசுவாமி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் தர்ஷன் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டார்கள். காவல் துறை தகவல்களின்படி, ஜூன் 2024-ல் பெங்களூருவில் வைத்து மூன்று நாள்கள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கிலிருந்து நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கௌடா உள்பட 7 பேருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 2024-ல் பிணை வழங்கியது. விசாரணை கணிசமாக நிறைவடைந்துள்ளது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, எனவே, தொடர்ந்து காவலில் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை என்று கருதி உயர் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது.
நடிகர் தர்ஷன் உள்ளிட்டோருக்குப் பிணை வழங்கியதை கர்நாடக அரசு கடுமையாக எதிர்த்தது. கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நடிகர் தர்ஷன் உள்ளிட்டோருக்குப் பிணை வழங்கியதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிணை வழங்கப்பட்டால் அது விசாரணையைப் பாதிக்கலாம், சாட்சியங்கள் மீது தாக்கத்தை உண்டாக்கலாம் என்று கருதி உச்ச நீதிமன்றம் பிணையை ரத்து செய்துள்ளது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் 5 நட்சத்திர அந்தஸ்தில் கவனிக்கப்பட்டால், முதல் நடவடிக்கையாக அதிகாரிகளுடன் சேர்ந்து கண்காணிப்பாளர் இடைநீக்கம் செய்யப்படுவார் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
Darshan | Actor Darshan | Karnataka High Court | Karnataka Government | Supreme Court