விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா குழந்தைக்கு ஆமிர் கான், மிரா எனப் பெயர் சூட்டியுள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா கடந்த 2021-ல் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுடைய குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழா ஹைதராபாதில் நடைபெற்றது. விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா அழைப்பை ஏற்று பாலிவுட் நடிகர் ஆமிர் கான் பெயர் சூட்டும் விழாவில் பங்கேற்பதற்காக ஹைதராபாத் வந்துள்ளார்.
விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா குழந்தைக்கு ஆமிர் கான் மிரா எனப் பெயர் சூட்டினார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா கட்டா எக்ஸ் தளப் பக்கத்தில் இதுதொடர்பாக உணர்வுபூர்வமாகப் பதிவிட்டுள்ளதாவது:
"எங்கள் மிரா... எங்கள் குழந்தைக்குப் பெயர் சூட்டுவதற்காக ஹைதராபாத் வரை வந்த ஆமிர் கானுக்கு நன்றி. மிரா என்றால் அளவற்ற அன்பும் அமைதியும். அழகான பெயரைச் சூட்டியதற்கு நன்றி ஆமிர் கான்" என்று பதிவிட்டுள்ளார்கள்.
அண்மை வருடங்களாகவே விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா குடும்பத்தினருடன் ஆமிர் கான் நெருக்கமாக இருந்து வருகிறார். கடந்த 2023-ல் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, தாயாரின் சிகிச்சைக்காக சென்னை வந்திருந்தார் ஆமிர் கான். வெள்ளத்தில் சிக்கிக்கொண்டிருந்தபோது, விஷ்ணு விஷாலுடன் ஆமிர் கானும் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். நடிகர் அஜித் உதவியால் இவர்கள் மீட்கப்பட்டார்கள். அப்போது மூவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.