70-வது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்கியுள்ளார்.
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி வருகிறது. இந்நிலையில், 70-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று தில்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 16 அன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.
தமிழில், பொன்னியின் செல்வன் 1 படத்துக்கு 4 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. மேலும், திருச்சிற்றம்பலம் படத்துக்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.
தமிழுக்குக் கிடைத்த விருதுகள்
சிறந்த தமிழ்ப் படம்: பொன்னியின் செல்வன் 1
சிறந்த பின்னணி இசை: ஏ.ஆர். ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த ஒலிப்பதிவு: ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த ஒளிப்பதிவு: ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த நடிகை: நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)
சிறந்த நடன இயக்கம்: ஜானி & சதீஷ் கிருஷ்ணன் (திருச்சிற்றம்பலம்)
மேலும், சிறந்த பொழுதுபோக்கு படமாக காந்தாரா தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகராக ரிஷப் ஷெட்டி (காந்தாரா படத்துக்காக) தேர்வு செய்யப்பட்டார். சிறந்த கன்னடப் படமாக கேஜிஎஃப் 2, சிறந்த படமாக ஆட்டம் (மலையாளம்) தேர்வு செய்யப்பட்டன. சிறந்த பிண்ணனி பாடகராக அர்ஜித் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான், மணி ரத்னம் உள்பட அனைவரும் தேசிய திரைப்பட விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இன்று பெற்றுக் கொண்டனர். இது ஏ.ஆர். ரஹ்மானின் 7-வது தேசிய விருதாகும்.
முன்னதாக, பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது நிறுத்தி வைக்கப்பட்டது.