
பஞ்சாப் 95 எனும் படம் தணிக்கை வாரியத்தின் ஒப்புதல் கிடைக்காமல் வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. படத்தை இயக்கியவர் ஹனி டிரெஹான். மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஜஸ்வந்த் சிங் கல்ராவின் வாழ்க்கை மற்றும் மறைவு பற்றிய படம் இது.
யார் இந்த ஜஸ்வந்த் சிங் கல்ரா?
கூட்டுறவு வங்கி இயக்குநரான இவர் மனித உரிமை செயற்பாட்டாளராக மாறினார். 1980, 1990-களில் ஏராளமான சீக்கிய இளைஞர்கள் காணாமல் போனதற்கும், போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதற்கும் எதிராகச் செயல்பட்டவர் ஜஸ்வந்த் சிங்.
இவர் ஷிரோமனி அகாலி தளம் கட்சியின் மனித உரிமை அணியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 6, 1995-ல் வீட்டிலிருந்து கடத்தப்பட்ட ஜஸ்வந்த் சிங், காவல் துறையினரின் துன்புறுத்தலைத் தொடர்ந்து கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பாக அவருடைய மனைவி தொடர்ந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. விசாரணை முடிவில் 6 காவலர்கள் கொலைக் குற்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டார்கள்.
ஜஸ்வந்த் சிங் குடும்பத்தினரின் அனுமதியுடனே பஞ்சாப் 95 படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் தணிக்கை வாரியத்திடம் 2022-ல் சமர்ப்பிக்கப்பட்டது. 21 இடங்களில் எடிட் செய்ய வேண்டும் என தணிக்கை வாரியம் சார்பில் பல மாதங்களுக்குப் பிறகு பதிலளிக்கப்பட்டது. பிறகு, மறுஆய்வுக் குழுவினரால் இப்படம் பலமுறை பார்க்கப்பட்டது. எடிட் செய்ய வேண்டும் என தணிக்கை வாரியம் சார்பில் சொல்லப்பட்டுள்ள மொத்த எண்ணிக்கை தற்போது 127 ஆக உள்ளது.
இந்தியாவுக்கு வெளியே பிப்ரவரி 7 அன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. டொரொன்டோ திரைப்பட விழாவில் படத்தைத் திரையிட திட்டமிட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் படம் திரும்பப் பெறப்பட்டது. அழுத்தத்தின் பெயரில் வெளியீடு தடுத்து நிறுத்தப்பட்டதாக இயக்குநர் குற்றம்சாட்டினார். தணிக்கை வாரியம் பிரச்னை காரணமாக இப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.
தமிழிலிருந்து வெற்றி மாறன் தயாரிப்பில் 'அறம்' புகழ் கோபி நயினார் இயக்கிய மனுசி படம் தணிக்கை வாரியத்தில் பிரச்னையை எதிர்கொண்டது. இதை எதிர்த்து வெற்றி மாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, ஆட்சேபனைக்குரிய பகுதிகளை எடிட் செய்து சமர்ப்பிக்க வேண்டும் என தணிக்கை வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்கு முடித்துவைக்கப்பட்டது.