மதராஸியும் லோகாவும் தமிழ்நாட்டில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் நாளை (செப். 12) 10 தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.
பெரிய நட்சத்திரங்களின் வசீகரத்தில் திரையுலகம் இருந்தாலும், வாரந்தோறும் வெள்ளியன்று புதிய படம் வெளியாவது தவிர்க்க முடியாததாகவே உள்ளது. அண்மைக் காலமாக அதிகளவில் படங்கள் வெளியாகி வருகின்றன. அதேபோல நாளையும் ஒரே நாளில் 10 தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.
பிரபலமாக அறியப்படும் கலைஞர்களில் ஜி.வி. பிரகாஷின் பிளாக்மெயில், அதர்வா நடித்துள்ள தணல், அர்ஜுன் தாஸ் நடித்துள்ள பாம், சின்னத்திரையில் புகழைச் சம்பாதித்த நடிகர் குமரன் ஹீரோவாக அறிமுகமாகும் குமார சம்பவம் போன்ற படங்கள் வெளியாகின்றன. மற்ற படங்கள் அனைத்தும் இன்னும் புகழைத் தொடாத நட்சத்திரங்கள் அல்லது புதிய முகங்களைக் கொண்ட படங்களாக உள்ளன.
காயல், யோலோ, மதுரை 16, உருட்டு உருட்டு, அந்த 7 நாள்கள், தாவுத் ஆகிய படங்களும் நாளை வெளியாகின்றன. மொத்தம் வெளியாகவுள்ள 10 தமிழ்ப் படங்களில் ஏதேனும் ஒன்றிரண்டு படங்கள் கடைசி நிமிடத்தில் பின்வாங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் மதராஸி கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்துக்கும் செப்டம்பர் 12 அன்று திரையரங்குகளில் பல காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கல்யாணி பிரியதர்ஷனின் லோகா மிரட்டல் வெற்றியைப் பெற்றுள்ளதால், இப்படத்துக்கும் சென்னையில் ஏராளமான காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னையில் இவ்விரு படங்கள் மட்டுமே குறைந்தபட்சம் 100 காட்சிகளுக்கு மேல் திரையிடப்படுகின்றன. இதற்கு மத்தியில் தான் 10 படங்கள் நாளை வெளியாகின்றன.
tamil movie releases | Tamil Movie | Friday Release | Blackmail | Bomb | Thanal | GV Prakash | Atharvaa | Kumaran | Arjundas |