மலையாள நடிகர் முகேஷ் மீது நடிகை ஒருவர் அளித்த புகாரின்பேரில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரபல நடிகரும், எம்எல்ஏவுமான நடிகர் முகேஷ் மீது ஆகஸ்ட் 29 அன்று ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடிகர் முகேஷை அடுத்த 5 நாட்களுக்கு கைது செய்யக் கூடாது என்று எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக மற்றொரு நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் வடக்கஞ்சேரி காவல் துறையினர் நடிகர் முகேஷ் மீது மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.
2011-ல் நாடகமே உலகம் என்கிற படத்தின் படப்பிடிப்பின் போது ஹோட்டலில் வைத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்த நடிகை தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணையை சிறப்புப் புலனாய்வுக் குழு மேற்கொள்ளும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.