அஜித் தொடர்பான ஒரு தருணம் கோட் படத்தில் இடம்பெற்றுள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள தி கோட் (தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படம் வரும் செப்டம்பர் 5-ல் வெளியாக உள்ளது.
இப்படத்தில் பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி, மோகன், பிரபுதேவா, ஜெயராம், விடிவி கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா போன்ற பலரும் நடித்துள்ளனர். இசை - யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பு - ஏஜிஎஸ் நிறுவனம். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆகஸ்ட் 17 அன்று வெளியானது.
இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் தொடர்பாக கலாட்டா யூடியூப் சேனலுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு பேட்டியளித்துள்ளார்.
வெங்கட் பிரபு பேசியதாவது:
“அஜித் தொடர்பான ஒரு தருணம் கோட் படத்தில் நிச்சயமாக இருக்கிறது. ஆனால், ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல் இருக்குமா என்று தெரியவில்லை. இது குறித்து நான் வேறெதுவும் சொல்லமாட்டேன். மங்காத்தா படத்தில் விஜய் வருவது போன்ற ஒரு காட்சி இருந்தது. மற்ற அஜித் படங்களில் இதுபோன்று பார்த்திருக்க முடியாது. கோட் டிரைலரில் விஜய் ஒரு வசனம் பேசியிருப்பார். முன்னதாக அந்த வசனத்தை அஜித்தும் பேசினார். அதேபோல், குட் பேட் அக்லி படத்தில் விஜய்யின் ஒரு வசனத்தை அஜித் பேசியுள்ளார். எனவே ரசிகர்கள் இடையே எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், விஜய் - அஜித் இடையே நல்ல நட்பு உள்ளது” என்றார்.