தன் மீது வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ரியாஸ் கான்.
மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
முன்னதாக, மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை புகார் எழுந்த நிலையில், சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் சித்திக் மீது புகார் எழுப்பிய மலையாள நடிகை ரேவதி சம்பத், நடிகர் ரியாஸ் கான் மீதும் குற்றம்சாட்டியிருந்தார்.
ரியாஸ் கான் தன்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, தன்னை தவறான பாதைக்கு அழைத்ததாகவும், அதற்கு ரேவதி மறுப்பு தெரிவித்த நிலையில் அவரது தோழிகளையாவது அறிமுகம் செய்து வைக்கும்படி ஆபாசமாக பேசியதாகவும் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, “இந்த பாலியல் புகாரை நானே தொலைக்காட்சியில் பார்த்த பின்பு தான் தெரிந்து கொண்டேன். அந்த நடிகை யார் என்றே எனக்கு தெரியாது, அவருக்கு நான் போன் செய்ததும் கிடையாது. அதற்கான ஆதாரம் இருக்கிறதா?” என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளார் ரியாஸ் கான்.