பெண்களின் பாதுகாப்பு குறித்து அறிய சினிமா துறையில் சிறப்புப் குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்று நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக ஏசியாநெட் நியூஸுக்கு அளித்த பேட்டியில், “படப்பிடிப்பின் போது வழங்கப்படும் கேரவனில் ரகசியமாக கேமராக்களை பொருத்தி நடிகைகள் ஆடை மாற்றும் வீடியோக்களை பதிவு செய்து நடிகர்கள் ஒரு சிலர் தங்களின் செல்போனில் பார்ப்பார்கள். இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க நான் ஹோட்டலில் அறை எடுத்துக்கொள்வேன்” என்று ராதிகா பேசியிருந்தார்.
இந்நிலையில் ராதிகா நடிக்கும் ‘தாயம்மா குடும்பத்தார்’ சீரியல் குழுவினர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதில் பேசிய ராதிகா, “பெண்களின் பாதுகாப்பு குறித்து அறிய சினிமா துறையில் சிறப்புப் குழு ஒன்றை அமைக்கவேண்டும். இன்றைய இளைஞர்களின் மனநிலை தவறாக உள்ளது. ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு கதை உள்ளது. ஒரு பக்கம் சுனிதா வில்லியம்ஸ், கமலா ஹாரிஸ் போன்ற பெண்கள் சாதித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், நாங்கள் இதுபோன்ற பிரச்னைகளை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். இது பெண்களுக்கு மிகப்பெரிய தோல்வி. இதுபோன்ற சூழலில் பெரிய நடிகர்களின் மௌனம் தவறாக தெரியும். பெரிய நடிகைகளில் யாரெல்லாம் பாதிக்கப்பட்டார்கள் என்பது ஒவ்வொரு நடிகருக்கும் தெரியும், ஒவ்வொரு இயக்குநருக்கும் தெரியும். அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களிடம் ஆறுதலாக ஒரு வார்த்தை பேசினால் நன்றாக இருக்கும். இது குறித்து பொதுவெளியில் பேச தயங்குகிறார்கள். கேரவன் விவகாரம் குறித்து விளக்கம் தான் கொடுத்தேன். புகார் அளிக்கவில்லை. பெண்களின் பாதுகாப்புக்கு அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்” என்றார்.