ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதை நினைத்து இன்று வரை அழுதுகொண்டே இருக்கிறேன் என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமா சென் உட்பட பலர் நடிப்பில் 2010-ல் வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’.
இப்படம் வெளியான போது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், இப்படத்தின் மறுவெளியீட்டுக்குப் பிறகு ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போது வெளியாகும் என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் குறித்து எங்கேயும் மனம் திறக்காத செல்வராகவன், தற்போது அப்படம் குறித்து பேசியுள்ளார்.
செல்வராகவன் பேசியதாவது:
“ஆயிரத்தில் ஒருவனைப் பற்றி நிறைய பேர் பேச சொன்னார்கள். எனக்கு பேசத் தோன்றவில்லை. ஏனென்றால் அப்படம் கொடுத்த வலிகள், ரணங்கள், காயங்கள், தழும்புகள் என்றுமே வலித்துக் கொண்டேதான் இருக்கும். அவ்வளவு வலியை யாரும் அனுபவித்திருக்க மாட்டார்கள்.
இப்படத்தை ஆரம்பிக்கும் போது ஒரு புதிய அனுபவத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து தொடங்கினேன். ஒவ்வொரு நாளும் பாம்புகள், தேள், அட்டைகளுடன் கஷ்டத்துக்கு நடுவில் படப்பிடிப்பு நடந்தது.
பாதி படம் முடிந்தப் பிறகு கொடுக்கப்பட்ட பட்ஜெட்டில் படத்தை முடிக்க முடியாது என்பது தெரிந்தது. உடனே, தயாரிப்பாளருக்கு அழைத்து உங்களை சிரமப்படுத்த விரும்பவில்லை. நானே தயாரித்துக் கொள்கிறேன் என்றேன். ஆனால், அவர் இப்படத்தை நான் தான் தயாரிப்பேன் என்று மீண்டும் 5 கோடி ரூபாய் கொடுத்தார். அதன் பிறகும் இன்னும் செலவாகும் என்று தெரிந்ததால் நானே வட்டிக்கு கடன் வாங்கி மீதி படத்தை முடித்தேன்.
படம் வெளியானப் பிறகு மிகவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. படத்தில் நடித்தவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதை நினைத்து இன்று வரை அழுதுகொண்டே இருக்கிறேன். இனி சோழர்கள் பற்றியோ அரசர்கள் பற்றியோ படம் எடுப்பவர்கள் எங்களுக்கு நன்றி தெரிவித்து கார்டாவது போடுங்கள்”.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.