25 கிலோவுக்கும் அதிகமாக அரிசி மூட்டைகள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படுமா?

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை ஏற்கப்பட்டால் 25 கிலோவுக்கும் கூடுதலான மூட்டைகளில் அடைத்து விற்கப்படும் அரிசியின் விலை உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது
25 கிலோவுக்கும் அதிகமாக அரிசி மூட்டைகள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படுமா?
1 min read

25 கிலோவுக்கும் கூடுதலான எடையைக் கொண்ட அரிசி மூட்டைகள் மீது 5 % ஜிஎஸ்டி வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்கனவே பரிந்துரைத்துள்ளது. இதை ஒட்டி வெளியாகியிருக்கும் சுற்றறிக்கையால், சில்லறை விற்பனையில் அரிசியின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 25 கிலோ மற்றும் அதற்குக் கீழ் உள்ள அரிசி மூட்டைகள் மீது 5 % ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. அரிசி மூட்டைகள் மீதான இந்த வரி விதிப்பு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டபோது இதில் இருந்து விலக்கு பெறும் வகையில் 26 கிலோ எடை உள்ள அரிசி மூட்டைகள் வியாபாரிகளால் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் 25 கிலோவுக்கும் கூடுதலான எடையைக் கொண்ட அரிசி மூட்டைகளை விவசாயப் பண்ணை விளைபொருட்களாகக் கருத முடியாது என்று ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்கனவே பரிந்துரைத்திருந்தது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்தப் பரிந்துரையை மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய மறைமுக வரிகள் வாரியம், சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரை ஏற்கப்பட்டால் 26 கிலோ மற்றும் அதற்குக் கூடுதலான மூட்டைகளில் விற்கப்படும் அரிசியின் விலை உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

நாட்டில் ஏற்கனவே அரிசி மற்றும் பருப்பின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அடிப்படை உணவுப்பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பலதரப்பினரால் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 26 கிலோ மற்றும் அதற்குக் கூடுதலான மூட்டைகளில் விற்கப்படும் அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டால் சில்லறை விற்பனையில் அரிசியின் விலை உயரும் வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in