ஜூன் 4 அன்று இந்திய பங்குச் சந்தை ஏற்றம் காணுமா?: நிபுணர் விளக்கம்

பங்குச் சந்தை குறித்து ஆளும் கட்சி ஊகிப்பது பொருத்தமற்றது. சில நேரங்களில் இது தவறாக வழிநடத்தும்...
ஜூன் 4 அன்று இந்திய பங்குச் சந்தை ஏற்றம் காணுமா?: நிபுணர் விளக்கம்

மக்களவைத் தேர்தல் முடிவு வெளியாகும் நாளன்று இந்தியப் பங்குச் சந்தை ஏற்றம் காணுமா என்கிற கேள்விக்கான விடையை அறிய முதலீட்டாளர்கள் பலரும் ஆவலாக உள்ளார்கள்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4-ல் பங்குச் சந்தை புதிய உச்சத்தைத் தொடும் என பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஒரு நேர்காணலில் தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்குச் சந்தை குறித்து பேசும்போது, ஜூன் 4-ல் பங்குச் சந்தை ஏற்றம் காண்பதற்கு முன்பு பங்குகளை வாங்கிவிடுங்கள் என அறிவுரை வழங்கி மூதலீட்டாளர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தினார். மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி, பங்குச் சந்தை சரிவைக் கண்ட நேரத்தில் இவ்விருவரும் தெரிவித்த கருத்துகளால் ஜூன் 4 அன்று தேர்தல் முடிவுகளோடு பங்குச் சந்தையின் நிலவரம் பற்றி அறியவும் மக்களுக்கு ஆர்வம் அதிகமாகியுள்ளது.

சிப்டைகர் (www.siptiger.com) நிறுவனத்தை நடத்தி வரும் நிதி ஆலோசகர் ஹசன் அலி, ஜூன் 4 அன்று இந்தியப் பங்குச் சந்தை ஏற்றம் காணுமா என்கிற கேள்விக்குப் பதிலளித்ததாவது:

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்யலாமா என்று என்னிடம் நிறைய பேர் அடிக்கடி கேட்கிறார்கள். பாஜக வெற்றி பெற்றால், பங்குச் சந்தை ஏற்றமடையும் என பிரதமர் மோடியும், அமித் ஷாவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆனால், பங்குச் சந்தை குறித்து ஆளும் கட்சி ஊகிப்பது பொருத்தமற்றது. சில நேரங்களில் சில்லறை முதலீட்டாளர்களை இது தவறாக வழிநடத்தும். இரு கட்சிகளும் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்பது உறுதியாகத் தெரியாத சூழலில், பங்குச் சந்தையில் முதலீடு செய்வது முற்றிலும் ஊகத்தின் அடிப்படையிலானது, அல்லது அதுவொரு சூதாட்டம் என்றே சொல்லலாம். சூதாட்டத்தின் விதியே, வெளிப்படையாகத் தெரிவது எதுவும் வெளிப்படையானது அல்ல என்பதுதான்.

என்னுடைய பார்வையில், பாஜக வெற்றி பெறும் என்பதன் அடிப்படையில்தான் சந்தையின் நிலவரம் தற்போது உள்ளது. பாஜக வெற்றி பெற்றால் சந்தை ஏற்றம் காணும் என்ற ஊகம் தவறாக வழிநடத்தக்கூடியது. சந்தை தற்போதைய நிலையில் நீடிக்க, பாஜக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வெற்றி பெற வேண்டும். மேலும், இது நடக்காத பட்சத்தில் சந்தையின் நிலையற்றத் தன்மை மேலும் அதிகரிக்கும்.

வருங்காலச் பங்குச் சந்தை குறித்து தற்போதே ஊகிப்பவர்களை இந்தியத் தேர்தல் முடிவுகளும் அமெரிக்காவிலிருந்து வரும் வட்டிவிகிதம் குறித்த செய்திகளும் சேர்ந்து, மேலும் அபாயத்தில் தள்ளும் நிலைமையும் ஏற்படலாம்.

2000-க்குப் பிறகு, தேர்தல் முடிவுகள் வரும் நாளன்று இந்தியப் பங்குச் சந்தை எப்படி மாற்றம் கண்டுள்ளது?

2004: காங்கிரஸ் வெற்றி - நிஃப்டி 10% சரிவு

2009: காங்கிரஸ் வெற்றி - நிஃப்டி 40% ஏற்றம்

2014: பாஜக வெற்றி - நிஃப்டி 20% ஏற்றம்

2019: பாஜக வெற்றி - நிஃப்டி 8% ஏற்றம்

2024: ?

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in