ரூ. 12 லட்சம் வருமான வரி உச்ச வரம்பால் யாருக்கு லாபம்?

தடாலடியாக ரூ. 12 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ள வருமான வரி உச்ச வரம்பால், இனி சிறிய எல்ஐசி திட்டங்களில் மக்கள் முதலீடு செய்யும் போக்கு குறைந்துவிடும்.
ரூ. 12 லட்சம் வருமான வரி உச்ச வரம்பால் யாருக்கு லாபம்?
ANI
2 min read

புதிய வருமான வரி விதிப்பில், வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 12 லட்சமாக உயர்த்தப்படுவதாக 2025-2026 மத்திய பட்ஜெட்டில் இன்று (பிப்.01) அறிவித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

ஆண்டு வருமானமாக ரூ. 12 லட்சம் ஈட்டும் நபர்களுக்கு, அதிலுள்ள முதல் ரூ. 4 லட்சம் வருமானத்திற்கு வரி கிடையாது. மீதமுள்ள ரூ. 8 லட்சம் வருமானத்திற்கு வரித் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரை வருமானம் ஈட்டும் நபர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

சில புள்ளி விவரங்களின்படி, 140 கோடி மக்கள்தொகை உள்ள நமது நாட்டில், மொத்தமாக 7.5 கோடி மக்கள் மட்டுமே வருமான வரித் தாக்கல் செய்கிறார்கள். அந்த 7.5 கோடி மக்களில் மொத்தமாக 2 கோடி மக்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்.

மேலும், அந்த 2 கோடி மக்களில் சுமார் 1 முதல் 1.5 கோடி மக்கள் மட்டுமே மாதம் ரூ. 1 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டுகிறார்கள். எனவே இன்று அறிவிக்கப்பட்டுள்ள வருமான வரி உச்ச வரம்பு உயர்வின் தாக்கம், அந்த 2 கோடி மக்கள் மீது மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது.

நாட்டில் அதிகமாக வருமானம் ஈட்டும் முதல் 2 கோடி மக்களுக்கு மத்திய பட்ஜெட்டில் வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மீதமுள்ள 138 கோடி மக்களுக்கு எந்த வகையில் வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்கிற கேள்வி இயல்பாக எழுகிறது.

ரிலையன்ஸ், நயாரா போன்ற தனியார் பெட்ரோல் நிலையங்களில் இரவு நேரங்களிலும், மொத்த விற்பனையிலும் பெட்ரோல் வாங்கும் நபர்களுக்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த தள்ளுபடி பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றால் வழங்கப்படுவதில்லை.

பெட்ரோல் நிலையங்களுக்கு ஒரு மாதிரியான வரி விதிப்பு அமலில் இருக்கும்போது, தனியார் நிறுவனங்களால் தள்ளுபடி விலையில் வழங்கப்படும் பெட்ரோல், பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்படுவது கிடையாது.

நாட்டிலேயே அதிகமாக வருவாய் ஈட்டுபவர்களுக்காக வருமான வரி உச்ச வரம்பை உயர்த்தியதற்குப் பதிலாக, பெட்ரோல் மற்றும் எரிவாயு மீதான வரிகளை குறைத்திருந்தால் அதனால் எளிய மக்களுக்கு அதிக பலன்கள் கிடைத்திருக்கும். எளிய மக்களால் அவ்வாறு சேமிக்கப்படும் பணம், அவர்களால் சந்தையில் செலவழிக்கப்படும். இதனால் நாட்டில் பணப்புழக்கம் அதிகரித்திருக்கும்

ஆனால் இந்த வரி விலக்கால் அதிக வருவாய் ஈட்டுபவர்களால் சேமிக்கப்படும் பணம் சந்தையில் புழங்காது. அது நேரடியாக சேமிப்பிற்குச் சென்றுவிடும். எனவே அதனால் நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்காது, தனியார் நுகர்வும் உயராது.

மேலும், இதுவரை வருமான வரி விலக்கு பெறுவதற்காக சிறிய வகையிலான எல்ஐசி சேமிப்புத் திட்டங்களில் மக்கள் முதலீடு செய்தார்கள். தடாலடியாக ரூ. 7 லட்சத்திலிருந்து, ரூ. 12 லட்சத்திற்கு வருமான வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் இனி எல்ஐசி திட்டங்களில் மக்கள் முதலீடு செய்யும் போக்கு குறைந்துவிடும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in