அமெரிக்க வரி: தேச நலனைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உறுதி! | USA | Tariffs

வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை இறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு, இந்தியாவும் அமெரிக்காவும் மார்ச் 2025-ல் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின.
பியூஷ் கோயல் - கோப்புபடம்
பியூஷ் கோயல் - கோப்புபடம்ANI
1 min read

இந்தியா மீது 25% இறக்குமதி வரியுடன் கூடுதல் அபராதங்கள் விதிக்கப்படும் என நேற்று (ஜூலை 30) அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், தேச நலனைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (ஜூலை 31) உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 9வது நாளான இன்று, அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நடைமுறை குறித்து மக்களவையில் அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது,

`அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் 2 அன்று பரஸ்பர வரி விதிப்பு குறித்த நிர்வாக உத்தரவை பிறப்பித்தார். ஏப்ரல் 5, 2025 முதல் 10% அடிப்படை வரி அமலுக்கு வந்தது, அதன்பிறகு இந்தியா மீது ஒட்டுமொத்தமாக 26% வரி விதிக்கப்பட்டது.

நாடு சார்ந்த இந்த கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 9 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் முதலில் 90 நாள்கள் வரையிலும், பின்பு ஆகஸ்ட் 1 வரையிலும் அது நீட்டிக்கப்பட்டது’ என்றார்.

அமெரிக்காவுக்கும், பிற நாடுகளுக்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் வகையில், இந்த வரி விதிப்பு நடைமுறையை ஆகஸ்ட் 1 வரை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் நிறுத்தி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து மக்களவையில் பியூஷ் கோயல் கூறியதாவது,

`2025 அக்டோபர்-நவம்பர் மாதத்திற்குள் ஒரு நியாயமான, சமநிலை உடைய, இரு நாடுகளுக்கும் நன்மை அளிக்கும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் (BTA) முதல் கட்டத்தை இறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு, இந்தியாவும் அமெரிக்காவும் மார்ச் 2025-ல் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின’ என்றார்.

ஆனால் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருவதையும், வர்த்தகம் மேற்கொள்ள இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும் காரணம் காட்டி ஆகஸ்ட் 1 முதல் இந்திய இறக்குமதிகள் மீது 25% வரியுடன், கூடுதல் அபராதங்கள் விதிக்கப்படும் என்று டிரம்ப் நேற்று (ஜூலை 30) அறிவித்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக பியூஷ் கோயல் மக்களவையில் பேசியதாவது,

`சமீபத்திய முன்னேற்றங்களின் தாக்கத்தை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது, ஏற்றுமதியாளர்கள், தொழில்துறையினர் மற்றும் பிற பங்குதாரர்களின் கவலைகளைப் புரிந்துகொள்ள வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினர் நலனைக் கருத்தில்கொண்டு, தேச நலனைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in