
ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் நிலையான வைப்புத் தொகை திட்டத்தில் வங்கிகளில் முதலீடு செய்பவர்களுக்கான புதிய அறிவிப்பை பட்ஜெட் உரையில் வெளியிட்டுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளில் கிடைக்கும் வட்டித்தொகை ஒவ்வொரு காலாண்டிலும் சம்மந்தப்பட்ட வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அத்தகைய வட்டித்தொகை குறிப்பிட்ட அளவை தாண்டும்போது அதற்கு வரி பிடித்தம் செய்யப்படும்.
60 வயதுக்கு உட்பட்டோருக்கு ஓர் ஆண்டில் கிடைக்கும் வட்டித்தொகை ரூ. 40 ஆயிரத்தைத் தாண்டினால் அதற்கு 10 சதவீதம் வரி பிடித்தமும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஓர் ஆண்டில் கிடைக்கும் வட்டித்தொகை ரூ. 50 ஆயிரத்தைத் தாண்டினால் அதற்கு 10 சதவீதம் வரி பிடித்தமும் செய்யப்பட்டது.
இந்நிலையில், 60 வயதுக்கு உட்பட்டோருக்குக் கிடைக்கும் வட்டித்தொகை மீது வரி பிடித்தம் செய்வதற்கான உச்சவரம்பு ரூ. 40 ஆயிரத்திலிருந்து, ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
உதாரணமாக ஒரு ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கில் முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு ஆண்டிற்கு ரூ. 75 ஆயிரம் வட்டி கிடைக்கிறது என்றால், அந்த வட்டித்தொகையில் 10 சதவீதமான ரூ. 7,500 வரி பிடித்தம் செய்யப்படும்.
அத்துடன், 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்குக் கிடைக்கும் வட்டித்தொகை மீது வரி பிடித்தம் செய்வதற்கான உச்சவரம்பு ரூ. 50 ஆயிரத்திலிருந்து, ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் நிதியமைச்சர்.
மேலும், புதிய வருமான வரி முறைப்படி ஆண்டுக்கு ரூ. 12 லட்சத்து 75 ஆயிரம் வரை வருமானம் ஈட்டும் நபர்களுக்கு வருமான வரி பிடித்தம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, ஃபிக்ஸட் டெபாசிட் வட்டித்தொகை மீதான வரி பிடித்தம் தொடர்பாகக் குறிப்பிட்டு அதை கிளைம் செய்துகொள்ளலாம்.