வங்கிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்யவுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
தில்லியில் வரும் ஆகஸ்ட் 19-ல் நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில் நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள் ஆகியவற்றின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஆகஸ்ட் 19-ல் தில்லி விஞ்ஞான் பவனில் நடக்கும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்தும், மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மண்டல ஊரக வங்கிகளின் செயல்பாடுகள் குறித்தும் மதிப்பாய்வு செய்கிறார் நிர்மலா சீதாராமன்.
இந்தக் கூட்டத்தில் வைத்து, முக்கியமான பொருளாதார அளவீடுகளையும், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் செயல்பாடுகளையும் மதிப்பீடு செய்யவும், அரசின் பொருளாதார இலக்குகளை முன்வைத்து வங்கிகள் செயல்படுகின்றனவா என்பதை அறியவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய அரசின் முக்கிய நலத்திட்டங்களான பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டம், பிரதம மந்திரி சூரிய ஒளி இலவச மின்சாரத் திட்டம், பிரதம மந்திரி இலவச வீட்டுவசதித் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதில் பொதுத் துறை வங்கிகளின் பங்களிப்பு குறித்தும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள், வங்கித்துறையில் உள்ள சைபர் பாதுகாப்பு கட்டமைப்பு ஆகியவை குறித்தும் ஆய்வு செய்கிறார் நிதியமைச்சர்.
இந்த விரிவான ஆய்வுக்கூட்டத்தில் பொதுத்துறை வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் கிடைக்கும் தகவல்களை முன்வைத்து நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கு மத்திய அரசு சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.