
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் முடிவைக் கைவிட இந்தியா மறுத்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த இந்திய இறக்குமதிகள் மீதான கூடுதல் 25% வரி விதிப்பு இன்று (ஆக. 27) அமலுக்கு வந்தது.
இதன் மூலம், இந்திய பொருட்கள் மீதான ஒட்டுமொத்த அமெரிக்க வரி 50% ஆக உயர்த்துள்ளது. இந்த வரி விதிப்பு உயர்வு இந்திய நேரப்படி இன்று காலை 9:30 மணிக்கு அமலுக்கு வந்தது.
அதிகப்படியான வரிகள் பல்வேறு துறைகளின் ஏற்றுமதியாளர்களை கடுமையாக பாதிக்கும் என்றும், வளர்ச்சிக்கான வாய்ப்புகளை குறைத்துவிடும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி (GTRI) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 60.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்திய ஏற்றுமதியை அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு பாதிக்கிறது.
குறிப்பாக ஜவுளி, ரத்தினக் கற்கள், நகைகள், இறால், கம்பளங்கள், ஃபர்னிச்சர்கள் உள்ளிட்ட தொழிலாளர் சார்ந்த துறைகளின் ஏற்றுமதிகள் சுமார் 70% வரை குறையக்கூடும், இதனால் லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் பாதிப்பை சந்திப்பார்கள்.
மேலும், 2025 நிதியாண்டில் 86.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சுமார் 66% இந்திய ஏற்றுமதிகளை இந்த வரி உள்ளடக்கியுள்ளது,
இந்த வரிகள் தொடரும் பட்சத்தில், அடுத்த ஆண்டில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளின் மதிப்பு 49.6 பில்லியன் அமெரிக்க டாலராக குறையக்கூடும். இதனால் அமெரிக்க சந்தையில் ஏற்பட்டுள்ள இடைவெளியை சீனா, வியட்நாம் மற்றும் மெக்சிகோ போன்ற போட்டியாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது.
அமெரிக்க வரி விதிப்பிலிருந்து மருந்துகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் எஃகு பொருள்கள் ஆகியவை ஒப்பீட்டளவில் பாதிப்பை சந்திக்காது என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். வரி விதிப்பு கட்டமைப்பில் அளிக்கப்பட்டுள்ள விலக்குகள் மற்றும் இந்தியாவில் இருக்கும் வலுவான உள்நாட்டுத் தேவை ஆகியவை இந்த துறைகளுக்கான ஆதரவை வழங்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 6 அன்று இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்குக் கூடுதலாக 25% வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார், இதன் மூலம் ஒட்டுமொத்த வரி 50% ஆக உயர்ந்தது. டிரம்ப் கையெழுத்திட்ட உத்தரவின்படி, கூடுதல் வரிகள் 21 நாட்களுக்குப் பிறகு, இன்று (ஆக. 27) அமலுக்கு வந்துள்ளது.