வேளாண் கடனுக்கு சிபில் ஸ்கோர் நடைமுறை கூடாது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு!

பாதிப்புகள் கூடுதலாகி வரும் நிலையில், சிபில் ஸ்கோர் தகுதியைக் அளவீடாக கொண்டு விவசாயிகள் கடனை தீர்மானிக்கக்கூடாது.
வேளாண் கடனுக்கு சிபில் ஸ்கோர் நடைமுறை கூடாது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு!
ANI
1 min read

தமிழக கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் பயிர்கடன்களுக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் என்ற நடைமுறைக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்து, இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட கோரிக்கை வைத்துள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டுறவுத் துறை வங்கிகளில் `சிபில் ஸ்கோர்’ தரவு அடிப்படையில் கடன் வழங்கும் புதிய திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி, விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது,

`மே 26 அன்று தமிழ்நாடு கூட்டுறவுத் துறை பதிவாளர், விவசாயிகளுக்கு வணிக வங்கிகள் பின்பற்றுகிற நடைமுறையின்படி, இனி கூட்டுறவு கடன் பெறுவோர்களின் சிபில் ஸ்கோர் (CIBIL score) மதிப்பெண் பார்த்து தகுதி உள்ளோருக்கு மட்டுமே கடன் வழங்கிட வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி அண்மையில் புதிதாக பிறப்பித்த 9 விதிகள் கூட்டுறவு துறையைக் கட்டுப்படுத்தாது என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கூறிய நிலையில், அதற்கு மாறாக துறையின் தலைமை அலுவலர் உத்தரவிட்டாரா என்பதை அறிய விரும்புகிறோம்.

வேளாண்மை என்பது இயற்கையை சார்ந்த தொழிலாகும். விவசாயிகள் தங்கள் மூலதனத்தை வெட்ட வெளி நிலத்தில் போட்டுவிட்டு இயற்கை பேரிடர்கள், பருவ கால மாறுபாடுகள், இடுபொருள்களின் மாற்றங்களினால் ஏற்படும் இடர்களை எல்லாம் தாண்டி, பல மாதங்கள் காத்திருந்து போட்ட முதலீட்டை திருப்பி எடுக்கும் வரை படும் துன்பங்கள் மாளாது.

இப்படியான பாதிப்புகள் கூடுதலாகி வரும் நிலையில், சிபில் ஸ்கோர் தகுதியைக் அளவீடாக கொண்டு விவசாயிகள் கடனை தீர்மானிக்கக்கூடாது.

கடன் பெற்றோர் அக்கடனை திருப்பி செலுத்திய முறைகளை கணக்கீடாக கொண்ட சிபில் ஸ்கோர் மதிப்பெண்களின் அளவீடுதான் விவசாயிகள் கடன் பெறுவதற்கான தகுதியாக கொண்டு தீர்மானிக்கப்படும் என்றால் பெரும்பகுதி விவசாயிகளுக்கு கடனே கிடைக்காது.

வணிக வங்கிகளில் நடைமுறைகளில் உள்ள இம்முறை இப்போது கூட்டுறவுத்துறையிலும் அமல்படுத்தப்படுகிறது. வேளாண்மை தொழிலை புரிந்துகொள்ளாது, குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து, எந்த இடர்கள் நாட்டில் வந்தாலும் தன் வருமானத்தில் பங்கம் இருக்கக்கூடாது என்ற எண்ணம்கொண்ட உயர் அலுவலரின் எதார்த்தமற்ற சிந்தனைகளால் வெளிவந்த அறிவிப்பு இதுவாகும்.

வேளாண்மை கடன் வழங்குவதில் சிபில் ஸ்கோர் அளவீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக முதல்வர் தலையிட்டு வேளாண் தொழிலுக்கான கடன்களில் சிபில் ஸ்கோர் முறையை கைவிட நடவடிக்கை எடுத்திடவேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in