இந்தியாவில் உள்ள 10 பெரிய மாநிலங்களின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துச் சாதனை புரிந்துள்ளது தமிழ்நாடு. இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது தெலங்கானா மாநிலம்.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், 2023-2024 நிதியாண்டுக்கான 10 பெரிய மாநிலங்களின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடந்த 2023-2024 நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 9.2 சதவீதத்தைப் பெற்று ரூ. 7.9 லட்சம் கோடி மதிப்பிலான உள்நாட்டு உற்பத்தியை எட்டியது தெலங்கானா மாநிலம். தெலங்கானா எட்டிய 9.2 சதவீத வளர்ச்சி விகிதம் தேசிய சராசரியான 8.2 சதவீதத்தைவிட அதிகமாகும்.
அதுபோல கடந்த நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 8.2 சதவீதத்தைப் பெற்று ரூ. 15.7 லட்சம் கோடி மதிப்பிலான உள்நாட்டு உற்பத்தியை எட்டியது தமிழ்நாடு. அதேநேரம் உள்நாட்டு உற்பத்தி மதிப்பைக் கணக்கிடும்போது இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலமாக உள்ளது தமிழ்நாடு. உள்நாட்டு உற்பத்தி மதிப்பின்படி முதல் இரண்டு இடங்களை மஹாராஷ்டிராவும், கர்நாடகாவும் பெற்றுள்ளன.
மாநிலங்களின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைத் துறைவாரியாகக் கணக்கிட்டால், அனைத்து பெரிய மாநிலங்களின் வளர்ச்சியிலும் அம்மாநிலங்களின் சேவைத்துறை அதிகமாகப் பங்களித்துள்ளது. இதன்படி, தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 52 % சேவைத்துறையின் பங்களிப்பாகும்.