ஸோஹோ கார்ப் தலைமைச் செயல் அலுவலர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார்.
இதிலிருந்து விலகிய அவர் ஸோஹோவில் தலைமை விஞ்ஞானி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான முன்னெடுப்புகளின் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
மென்பொருள் மற்றும் அதுதொடர்புடைய சேவைகளை வழங்கி வருகிறது ஸோஹோ நிறுவனம். 1996-ல் AdventNet என்கிற பெயரில் ஸ்ரீதர் வேம்பு தொடங்கிய நிறுவனம், 2009-ல் ZOHO Corporation ஆக மாறி இன்று அந்நிறுவனத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
இந்நிலையில் சிஇஓ பொறுப்பிலிருந்து விலகி, ஸோஹோவில் தலைமை விஞ்ஞானி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான முன்னெடுப்புகளின் பொறுப்பை ஏற்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"இன்று புதிய அத்தியாயம் தொடங்குகிறது.
செயற்கை நுண்ணறிவு அடைந்துள்ள முக்கிய வளர்ச்சிகள் உள்பட பல்வேறு சவால்கள் மற்றும் எங்கள் முன் இருக்கும் வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான முன்னெடுப்புகளில் நான் கவனம் செலுத்துவது தான் சரியானதாக இருக்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனது தனிப்பட்ட கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடர்வதோடு இதில் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸோஹோ கார்ப் தலைமைச் செயல் அலுவலர் பொறுப்பிலிருந்து நான் விலகுகிறேன். தலைமை விஞ்ஞானி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான முன்னெடுப்புகளின் பொறுப்பை ஏற்கவுள்ளேன். எங்களுடைய இணை நிறுவனர் ஷைலேஷ் குமார் தவே, எங்களுடையக் குழுமத்தின் புதிய தலைமைச் செயல் அலுவலராகச் செயல்படுவார். ஸோஹோ யுஎஸ்-ஐ இணை நிறுவனர் டோனி தாமஸ் வழிநடத்தவுள்ளார். மேனேஜ் இஞ்சின் பிரிவை ராஜேஷ் கணேசன் வழிநடத்தவுள்ளார். http://Zoho.com பிரிவை மணி வேம்பு வழிநடத்தவுள்ளார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் உள்ள சவால்களை எந்தளவுக்குத் திறம்பட கையாள்கிறோம் என்பதைப் பொறுத்து தான் நிறுவனத்தின் எதிர்காலம் உள்ளது. ஆற்றலுடனும் வீரியத்துடனும் எனது புதிய பணியை எதிர்நோக்கியிருக்கிறேன். தொழில்நுட்ப வேலைகளில் மீண்டும் இணைவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி" என்று பதிவிட்டுள்ளார்.