ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு!

கடந்த பிப்ரவரியில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், இரண்டே மாதங்களில் தற்போது மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு!
1 min read

வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையிலான நிதிக் கொள்கைக் குழுவின் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் நான்கு முறை நடைபெறவேண்டும். ரிசர்வ் வங்கி ஆளுநர் உள்ளிட்ட 6 நபர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தக் குழுவில் பெரும்பான்மை அடிப்படையில், முக்கியத்துவம் மிக்க வட்டி விகிதங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும்.

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா கடந்தாண்டு டிசம்பரில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, நடப்பாண்டு பிப்ரவரியில் அவரது தலைமையில் நடைபெற்ற முதல் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் 6.5% ஆக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.25% சதவீதமாக இருக்கும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டே மாதங்களில் மேலும் 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு, ரெப்போ வட்டி விகிதம் 6% ஆக இருக்கும் என்று தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்களுக்கு வங்கிகள் வழங்கும் வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டுக்கான (2025-26) பணவீக்கம் (நுகர்வோர் விலைக் குறியீடு – Consumer Price Index) 4% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in