
வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6%-ல் இருந்து 5.5% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக இன்று (ஜூன் 6) ரிசர்வ வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் வீடு, வாகன, தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் கடந்த ஜூன் 4-ல் தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாள்களாக நடைபெற்று வந்த இந்த கூட்டம் இன்று நிறைவடைந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு டிசம்பரில் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து நடப்பாண்டு பிப்ரவரியில், 0.25% அளவுக்கு ரெப்போ வட்டி வகிதம் குறைக்கப்பட்டது. அதன்பிறகு ஏப்ரல் மாதத்தில் மீண்டும் 0.25% அளவுக்கு ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக ரெப்போ தற்போது குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த முறை தடாலடியாக 0.5% குறைக்க நிதிக் கொள்கை குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால், பொதுமக்களுக்கு வங்கிகளால் வழங்கப்படும் வீடு, வாகன மற்றும் தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
`வேகமாக மாறிவரும் உலகளாவிய பொருளாதார நிலை, பொருளாதார வளர்ச்சி கண்ணோட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து மதிப்பீடு செய்வதை அவசியமாக்குகிறது’ என்று ஆளுநர் மல்ஹோத்ரா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், 2025-26 நிதியாண்டில் நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.