5 ஆண்டுகளில் முதல்முறை: ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த ரிசர்வ் வங்கி!
5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையிலான நிதிக் கொள்கைக் குழுவின் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் நான்கு முறை நடைபெற வேண்டும். ரிசர்வ் வங்கி ஆளுநர் உள்ளிட்ட 6 நபர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தக் குழுவில் பெரும்பான்மை அடிப்படையில், முக்கியத்துவம் மிக்க வட்டி விகிதங்கள் குறித்த முடிவுகள் எடுக்கப்படும்.
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக கடந்தாண்டு டிசம்பரில் பொறுப்பேற்றுக்கொண்டார் முன்னாள் மத்திய வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா.
இந்நிலையில், சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான முதல் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் கடந்த பிப்.5-ல் தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் இறுதி நாளான இன்று (பிப்.7) ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுவரை 6.5 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.25 சதவீதமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் என்பது வெளியில் இருந்து வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதமாகும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறைந்துள்ளதால், பொதுமக்களுக்கு வங்கிகள் வழங்கும் வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைவதற்கு அதிக வாய்ப்புள்ளது.