
சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயிக்கும் விவகாரம், ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை வரம்பின் கீழ் வராததால், அவற்றை வங்கிகளே தீர்மானித்துக்கொள்ள சுதந்திரம் உள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா நேற்று (ஆக. 12) கூறியுள்ளார்.
குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வின் ஒரு பகுதியாக செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் மல்ஹோத்ரா, `குறைந்தபட்ச இருப்புத் தொகையை முடிவு செய்யும் பொறுப்பை வங்கிகள் வசம் ரிசர்வ் வங்கி ஒப்படைத்துள்ளது. ஒவ்வொரு வங்கியும் அதன் குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயித்துள்ளன. இது ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை வரம்பின் கீழ் இல்லை’ என்றார்.
புதிய சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்பை (MAB) பல மடங்கு அதிகரிக்க ஐசிஐசிஐ வங்கி அண்மையில் எடுத்த முடிவைத் தொடர்ந்து இத்தகைய கருத்து சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
ஐசிஐசிஐ வங்கியின் திருத்தப்பட்ட விதிகள்:
ஆகஸ்ட் 1, 2025 முதல், புதிய வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்பு வரம்பை ஐசிஐசிஐ வங்கி ஐந்து மடங்கு உயர்த்தியுள்ளது:
- நகர்ப்புற/பெருநகர வங்கிக் கிளைகள்: ரூ. 10,000-ல் இருந்து ரூ. 50,000 ஆக உயர்வு
- புறநகர் கிளைகள்: ரூ. 5,000-ல் இருந்து ரூ. 25,000 ஆக உயர்வு
- கிராமப்புற கிளைகள்: ரூ. 2,000-ல் இருந்து ரூ. 10,000 ஆக உயர்வு
இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி அல்லது அதற்குப் பிறகு திறக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். வங்கி புதிதாக அறிவிக்காவிட்டால், ஏற்கனவே கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் முந்தைய வரம்பில் தொடர்வார்கள்.
வங்கிகளுக்கு இடையேயான வேறுபாடுகள்:
சில வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.2,000 ஆக நிர்ணயித்துள்ளன, மற்றவை ரூ.10,000 ஆக நிர்ணயித்துள்ளன என்று சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
அதேநேரம் அவர் கூறியதுபோல பல பொதுத்துறை வங்கிகள் (PSBs) சில குறிப்பிட்ட வகையான கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கான தேவையை முற்றிலுமாக ரத்து செய்துள்ளன.
-பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) மற்றும் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புக் கணக்குகள் (BSBDAs) ஆகியவற்றின் கீழ் தொடங்கப்படும் வங்கிக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.