பிபிஎஃப்-பில் சேமிப்பவரா நீங்கள்?: புதிய அறிவிப்பு

ஒருவேளை நீங்கள் பணத்தை 6-ம் தேதி கட்டினால், அடுத்த மாதக் கணக்கில் தான்...
பிபிஎஃப்
பிபிஎஃப்

பொது வருங்கால வைப்பு நிதி ( பிபிஎஃப் ) கணக்கு வைத்திருக்கும் நபர்கள், தங்களின் பங்களிப்பை ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்ற புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

முதலீடுகளில் பலவிதம் இருந்தாலும், பாதுகாப்பான மற்றும் அதிக வட்டி வழங்கும் முதலீடுகளில் ஒன்றாக பொது வருங்கால வைப்பு நிதி பார்க்கப்படுகிறது.

இதில் சிலருக்கு பிஎஃப்புக்கும் பிபிஎஃப்புக்கும் சிறிது குழப்பம் ஏற்படலாம்.

பிஎஃப் அதாவது ஈபிஎஃப் (Employees’ Provident Fund (EPF) என்பது அலுவலகத்தில் பிடித்தம் செய்யப்படும் சேமிப்புத் தொகை. நீங்கள் ஒரு பகுதியும் நீங்கள் பணியாற்றும் நிறுவனம் ஒரு பகுதியும் பணம் போட்டு ஈபிஎஃப்பில் சேமிக்கப்படும். பிபிஎஃப் (Public Provident Fund (PPF) ) என்பது தனிநபர் தனது விருப்பத்தின் பேரில் இத்திட்டத்தில் சேமிப்பது. வங்கிச் சேமிப்புக் கணக்கில் கிடைக்கும் ஆண்டு வட்டியை விடவும் இதில் அதிக வட்டி கிடைக்கும் என்பதால் பலரும் பிபிஎஃப்பில் பணம் சேமித்து வருகிறார்கள்.

சரி, விஷயத்துக்கு வருவோம்.

பிபிஎஃப் திட்ட விதிகளின்படி, ஒரு மாதத்தின் 5-ம் தேதி மற்றும் மாத இறுதியில் பிபிஎஃப் கணக்கில் உள்ள குறைந்த இருப்பின் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுகிறது. எனவே, பிபிஎஃப் கணக்கில் அதிக வட்டியைப் பெற, ஒவ்வொரு மாதத்தின் 5-ம் தேதிக்குள் பணத்தை செலுத்திவிட வேண்டும் என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிபிஎஃப் திட்டத்தில் 7.1 வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

ஒருவேளை நீங்கள் மாதந்தோறும் பணம் செலுத்துபவராக இருந்தால், உங்கள் பிபிஎஃப் கணக்கில் அந்த மாதத்தின் தொகையை 5-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

அப்படிச் செலுத்தினால் தான் அந்த மாதத்திற்கான வட்டி உங்களுக்கு இழப்பின்றி கிடைக்கும். ஒருவேளை நீங்கள் பணத்தை 6-ம் தேதி கட்டினால், அடுத்த மாதக் கணக்கில் தான் வைத்துக்கொள்ளப்படும். இதனால் 6-ம் தேதியிலிருந்து அந்த மாதத்தின் 30/31 வரைக்குமான வட்டியை நீங்கள் இழக்க நேரிடும்.

இன்னும் புரிவது போல் சொல்வதென்றால் உங்கள் பணத்தை பிபிஎஃப்பில் ஏப்ரல் 15 அன்று செலுத்துகிறீர்கள். ஆனால் பிபிஎஃப் விதிமுறையின்படி ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 30 வரை குறைந்த தொகைக்கான மாத வட்டியே கணக்குக்கு எடுத்துக்கொள்ளப்படும். எனவே நீங்கள் ஏப்ரல் 15-ல் பணம் செலுத்தினாலும் அதற்கு முன்பிருந்த தொகையே வட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும். ஏப்ரல் 15 அன்று செலுத்திய தொகை அந்த மாதக் கணக்கில் வராமல் அடுத்த மாதக் கணக்காகவே பார்க்கப்படும். இதனால் ஏப்ரல் மாதத்தில் அத்தொகைக்கான வட்டி கிடைக்காது. அதற்குப் பதிலாக ஏப்ரல் 5 அன்றோ அதற்கு முன்பே பணம் கட்டியிருந்தால் அந்தத் தொகை மாத வட்டிக்கான கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். எனவே, இனி பிபிஎஃப்-பில் தேதி பார்த்து கவனமாக முதலீடு செய்யவும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in