
வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் கட்டாயமாக வருமான வரி அனுமதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாக பரப்பப்படும் தகவல் தவறானது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
கடந்த ஜூலை 23-ல் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், 2015 கருப்பு பண சட்டத்தில், `வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் வருமான வரி அனுமதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்’ என்ற ஷரத்து சேர்க்கப்படும் என்று அறிவித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் கட்டாயமாக வருமான வரி அனுமதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று தகவல் பரப்பப்பட்டது.
எனவே இந்த அறிவிப்பு குறித்து விளக்கமளித்துள்ள மத்திய அரசு, நிதி முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களுக்கும், வரிமான வரி சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் சம்மந்தப்பட்டுள்ள நபர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். அது மட்டுமல்லாமல் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான வருமான வரி பாக்கி வைத்துள்ள நபர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்று விளக்கமளித்துள்ளது.
எனவே 1961 இந்திய வருமான வரி சட்டப் பிரிவு 230-ன் கீழ், வெளிநாடுகளுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் வருமான வரி அனுமதி சான்றிதழ் பெறத் தேவையில்லை என்று கூறியுள்ளது மத்திய அரசு.