எதற்காக புதிய வருமான வரி சட்டம்?: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

பழைய வருமான வரி முறையை முற்றிலுமாக நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.
எதற்காக புதிய வருமான வரி சட்டம்?: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
ANI
1 min read

புதிய வருமான வரி சட்டத்தின் அவசியம் குறித்து விளக்கமளித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கடந்த பிப்.1-ல் 2025-2026 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். புதிய வருமான வரி முறையில் வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 12 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும், புதிய வருமான வரி சட்டம் தொடர்பான மசோதா நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

இந்நிலையில், வருமான வரி சீர்திருத்தங்கள் தொடர்பாக இந்திய டுடே மற்றும் பிசினஸ் டுடே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பங்கேற்று நிர்மலா சீதாராமன் கூறியதாவது,

`கடந்த மூன்று நான்கு வருடங்களாக, வரி செலுத்துபவர்களுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் நிறைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இது தேசத்தின் கட்டமைப்புக்கு வரி செலுத்துவோர் மேற்கொள்ளும் சேவைக்கு மதிப்பளிக்கும் வகையில் பிரதமர் மோடி எடுத்துள்ள முயற்சிகளின் ஒரு பகுதியாகும்’ என்றார்

இதைத் தொடர்ந்து பழைய வருமான வரி முறை குறித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், நடைமுறை காரணங்களுக்காக இந்தியாவின் வரி விதிப்பு முறை எளிமையாக இருக்க வேண்டும் எனவும், பழைய வருமான வரி முறையை முற்றிலுமாக நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை எனவும் தகவல் தெரிவித்தார்.

புதிய வருமான வரி சட்டத்தின் அவசியம் குறித்து இந்த நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் கூறியதாவது,

`வருமான வரி விதிப்பு நடைமுறை முழுவதுமாக எளிமைப்படுத்தப்பட வேண்டும், அதற்காகவே 1961 முதல் அமலில் உள்ள பழைய சட்டத்திற்கு மாற்றாக புதிய வருமான வரி சட்டத்தை நாங்கள் கொண்டுவருகிறோம். பழைய சட்டம் அமலுக்கு வந்த பிறகு அதில் பல ஷரத்துகள் சேர்க்கப்பட்டன.

இதனால் அது ஒரு குவிமாடத்தைப் போல மிகவும் பருமனானதாகிவிட்டது. அதைப் பின்பற்றவேண்டுமன்றால் இங்கே அங்கே எனப் பக்கங்கள் பலவற்றைத் திருப்பித் திருப்பி பார்க்கவேண்டும். எனவே, அவை அனைத்தையும் எளிமைப்படுத்தும் பணியை புதிய சட்டம் மேற்கொள்ளப்போகிறது’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in