
இந்தியப் பங்குச் சந்தையில் புதிதாக இணையும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ஆகஸ்டில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக தேசிய பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்டில் வெறும் 12.3 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் மட்டுமே இந்தியப் பங்குச் சந்தையில் இணைந்துள்ளார்கள். நடப்பு நிதியாண்டில் மூன்றாவது குறைந்த எண்ணிக்கை இது.
2025 தொடங்கியதிலிருந்தே புதிய முதலீட்டாளர்கள் இணையும் வேகம் குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. மே, ஜூன் மற்றும் ஜூலையில் மட்டுமே இது ஏறுமுகத்தில் இருந்திருக்கிறது. ஆகஸ்டில் சரிவைச் சந்தித்துள்ளது, இந்த வேகத்தை மேலும் மந்தமாக்கியுள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இது குறைவு என்பது உறுதியாகிறது. வரி விதிப்பு சார்ந்த அதிர்ச்சிகள், உலகளாவிய அசாதாரண நிலை உள்ளிட்டவை இதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2025 முதல் ஆகஸ்ட் 2025 காலகட்டத்தில் சராசரியாக மாதந்தோறும் தலா 11.9 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் தேசிய பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ளார்கள். இதே பிப்ரவரி 2024 முதல் ஆகஸ்ட் 2024 வரையிலான காலகட்டத்தில் சராசரியாக மாதந்தோறும் தலா 19.2 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் இணைந்திருக்கிறார்கள்.
புதிதாக இணைந்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக இணைந்துள்ள முதலீட்டாளர்களின் மொத்த எண்ணிக்கை ஆகஸ்ட் இறுதியில் 12 கோடி எனும் மைல்கல்லை நெருங்கியுள்ளது. ஆகஸ்ட் இறுதியில், பதிவு செய்யப்பட்ட மொத்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 11.9 கோடியாக இருந்தது.
கடந்த இரு ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் என்பது குறிப்பிடத்தக்க வகையில் இருப்பதாகத் தெரிகிறது. பிப்ரவரி 2024-ல் 9 கோடி முதலீட்டாளர்கள் எனும் மைல்கல்லை எட்டியது. ஆகஸ்ட் 2024-ல் இது 10 கோடியாக விரிவடைந்தது. ஜனவரி 2025-ல் இது 11 கோடியைத் தொட்டது. செப்டம்பரில் இது 12 கோடி எனும் மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
NSE | National Stock Exchange | New Investors |