தற்போது நடைமுறையில் உள்ள 1961 வருமான வரி சட்டம் மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 23-ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அப்போது அவர் மேற்கொண்ட பட்ஜெட் உரையின்போது `அடுத்த 6 மாதத்துக்குள் தற்போது நடைமுறையில் உள்ள 1961 வருமான வரி சட்டம் மதிப்பாய்வு செய்யப்பட்டு, எளிமையான முறையில் அதில் மாற்றங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிவித்தார்.
இதை அடுத்து மத்திய பட்ஜெட் அறிவிப்பின்படி 6 மாத காலத்துக்குள் விரிவான முறையில் 1961 வருமான வரி சட்டத்தின் மதிப்பாய்வு பணி முடிக்கப்படும் என்று தகவல் தெரிவித்தார் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் ரவி அகர்வால்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 21-ல் நடந்த 165-வது வருமான வரி நாள் கொண்டாட்டத்தின்போது, `அடுத்த 6 மாதத்துக்குள் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்படும் அல்லது நடைமுறையில் இருக்கும் 1961 வருமான வரி சட்டத்தை எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்’ என்று அறிவித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மேலும் அப்போது, `தெளிவான முறையில், சுலபமாக புரிந்துகொள்ளும் வகையில் வருமான வரி சட்டம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக’, தகவலளித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
`வரி செலுத்தும் மக்கள் தேவையில்லாத துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடாது. பொதுமக்களிடம் வரி நோட்டீஸ் அளிக்கும்போது, எதனால் அது அளிக்கப்படுகிறது என்ற காரணங்களை தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். வரி சம்மந்தப்பட்ட அனைத்து செய்திகளும் எளிமையான முறையில் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இருக்க வேண்டும்’ என்று பேசினார் நிதியமைச்சர்.