அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், அதானி குழுமம் மீது பல்வேறு புகார்களை முன்வைத்துள்ளது. அதானி விவகாரத்தில் செபி அமைப்பின் தலைவர் மாதவி புச்சுக்குத் தனிப்பட்ட ஆதாயம் உள்ளதால் அதானி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. எனினும் ஹிண்டன்பர்க் தெரிவித்த குற்றச்சாட்டுகளால் இந்தியப் பங்குச் சந்தையில் மட்டுமல்லாமல் அதானி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
அதானி குழும நிறுவனங்களில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஜூலையில் மட்டும் ரூ. 2,000 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன.
கடந்த சில மாதங்களாகவே அதானி குழும நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. கடந்த மே மாதம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ரூ. 880 கோடி அளவுக்கு அதானி பங்குகளை வாங்கியுள்ளன. ஜூனில் இது மேலும் அதிகமாகி ரூ. 990 கோடி அளவுக்கு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் அதானி பங்குகள் வாங்கப்பட்டுள்ளன.
அதானி குழுமத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் மொத்த மதிப்பு ஜூலை நிலவரப்படி ரூ. 42,154 கோடி. இது ஜூனில் ரூ. 39,227 கோடியாக இருந்தது.
அதானி குழும நிறுவனங்களில் முதலீட்டாளர்களின் முதலீடுகள் ஜூன் மாதக் காலாண்டில் அதிகரித்துள்ளன. ரூ. 23,000 கோடி மதிப்பிலான அதானி பங்குகளை முதலீட்டாளர்கள் வைத்துள்ளார். இதை நேர்மறையான அறிகுறியாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
அதானி குழுமத்தில் அதானி போர்ட்ஸ் & செஸ் (Adani Ports & SEZ) நிறுவனங்களின் பங்குகளை ரூ. 1,100 கோடி அளவில் மியூச்சுவல் ஃபண்டுகள் அதிகமாக வாங்கியுள்ளன. இதற்கு அடுத்தபடியாக அதானி என்டர்பிரைசஸ் (Adani Enterprises) நிறுவனத்தில் ரூ. 890 கோடி அளவிலும், அதானி பவரில் (Adani Power) ரூ. 218 கோடி அளவிலும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் பங்குகள் வாங்கப்பட்டுள்ளன.