பொருளாதார வளர்ச்சியில் மஹாஷ்டிரம், உ.பி. முன்னிலை: எஸ்பிஐ ஆய்வு அறிக்கை

பொருளாதார வளர்ச்சியில் 
மஹாஷ்டிரம், உ.பி. முன்னிலை: எஸ்பிஐ ஆய்வு அறிக்கை

கோவிட் -19 தொற்றுக்குப் பின் இந்தியப் பொருளாதாரம் எழுச்சி பெற்றுள்ளது. சராசரியாக மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 8.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. கோவிட்-19 தொற்றுக்காலத்துக்கு முன்பு இருந்த 5.1 சதவீதத்தைவிட இது கணிசமான வளர்ச்சியாகும் என்றும் எஸ்.பி.ஐ. வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) ஆய்வின்படி 235 அடிப்படை புள்ளிகளின் வளர்ச்சியில் மஹாராஷ்டிரம் மற்றும் உத்தரப் பிரதேசம் முறையே 56 மற்றும் 40 அடிப்படைப் புள்ளிகளைப் பங்களித்து முன்னணியில் உள்ளன. மீதமுள்ள 90 பிபிஎஸ் புள்ளிகள் இதர மாநிலங்களின் பங்களிப்பாகும்.

மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியைப் பொறுத்தவரை குஜராத் அதன் பொருளாதார உற்பத்தியை இரட்டிப்பாக்கியுள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளில் 2.2 மடங்கு அதிகரிப்பைக் குறிக்கிறது.

கர்நாடகம், அஸ்ஸாம், ஆந்திரம், ஒடிஷா, தெலங்கானா, சிக்கிம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியுடன் அடுத்த நிலையில் உள்ளன.

பல மாநிலங்களில் தனிநபர் வருமானத்தின் உயர்வையும் இந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. குஜராத் கணிசமான வளர்ச்சி பெற்றுள்ளது. அதன் வளர்ச்சி 1.9 மடங்கு அதிகரித்துள்ளது. கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் அஸ்ஸாம் பின்தங்கியிருந்தாலும் வளர்ச்சியை நோக்கி முன்னேறுவதைப் பிரதிபலிக்கின்றன.

குஜராத், கர்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் மற்ற மாநிலங்களைவிட சிறப்பாகச் செயல்பட்டு பொருளாதார அதிகார மையங்களாக தங்கள் நிலையை உறுதிப்படுத்தியுள்ளன.

உத்தரப் பிரதேசம், சட்டீஸ்கர், பிஹார் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் நிலையான தனிநபர் வருமான வளர்ச்சியைப் பெற்றிருந்தாலும், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரம், பஞ்சாப், தில்லி மற்றும் கோவா போன்ற மாநிலங்கள் இந்த அம்சத்தில் சரிவைச் சந்தித்துள்ளன.

பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யவும் உள்ளடக்கிய வளர்ச்சி உத்திகளை அதிகரிக்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே கூட்டுமுயற்சி இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in