
மத்திய அரசின் ஜனவரி மாத நிதிப்பகிர்வில், 5 தென் மாநிலங்களுக்கும் சேர்த்து விடுவிக்கப்பட்ட நிதி குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.
மாநிலங்களுக்கான ஜனவரி மாத நிதிப்பகிர்வாக ரூ. 1.73 லட்சம் கோடியை விடுவித்துள்ளதாக கடந்த ஜன.10-ல் செய்திக்குறிப்பு வெளியிட்டது மத்திய அரசு. கடந்த 2024 டிசம்பரில் ரூ. 89 ஆயிரம் கோடியை மாநிலங்களுக்கு விடுவித்திருந்தது மத்திய அரசு. அதை ஒப்பிடும்போது ஜனவரி மாதத் தொகை ஏறத்தாழ இரு மடங்கு அதிகமாகும்.
மூலதன செலவினங்களை விரைவுபடுத்தவும், மேம்பாட்டுப் பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான செலவினங்களுக்கு நிதியளிக்கவும், மாநிலங்களுக்கு இந்த மாதம் கூடுதல் தொகையைப் பகிர்ந்தளிப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்தது.
இதன்படி, அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு ரூ. 31,039 கோடியும், பீஹாருக்கு ரூ. 17,403 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ. 13,583 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ரூ. 13,017 கோடியும், மஹாராஷ்டிரத்திற்கு ரூ. 10,930 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ. 10,426 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன.
தென் மாநிலங்களைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டிற்கு ரூ. 7,057 கோடியும், ஆந்திரத்திற்கு ரூ. 7,002 கோடியும், கர்நாடகத்திற்கு ரூ. 6310 கோடியும் தெலங்கானவிற்கு ரூ. 3,637 கோடியும், கேரளத்திற்கு ரூ. 3,330 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன. இதை முன்வைத்து தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,
`இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களித்து வரும் 5 தென் மாநிலங்களுக்கு வெறும் 15 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அதேநேரம் பீஹார், உ.பி., ம.பி., மாநிலங்களுக்கு மட்டும் சுமார் 40 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கூட்டுறவு கூட்டாட்சியா அல்லது மத்திய அரசின் ஓரவஞ்சனையா?’ என்றார்.