பாலிசி பஜாருக்கு ரூ. 5 கோடி அபராதம் விதிப்பு: பின்னணி என்ன? | Policy Bazaar | IRDAI | Fine | Insurance Regulator

பல்வேறு நிறுவனங்களின் காப்பீட்டுத் திட்டங்கள் சிறந்தவை என்று போதிய தரவுகள் இன்றி இணையதளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
பாலிசி பஜாருக்கு ரூ. 5 கோடி அபராதம் விதிப்பு: பின்னணி என்ன? | Policy Bazaar | IRDAI | Fine | Insurance Regulator
1 min read

காப்பீட்டுச் சட்டம், 1938 மற்றும் ஐஆர்டிஏஐ விதிமுறைகள், 2017 ஆகியவற்றின் கீழ் பல்வேறு விதிமுறைகளை மீறியதற்காக, பாலிசி பஜார் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) ரூ. 5 கோடி அபராதம் விதித்துள்ளது.

ஆகஸ்ட் 4, 2025 தேதியிட்ட ஐஆர்டிஏஐ-யின் அதிகாரப்பூர்வ உத்தரவில், விதி மீறல்கள், நிர்வாகக் குறைபாடுகள் தொடங்கி முறையற்ற விளம்பரப்படுத்துதல் நடைமுறை வரை 11 தனித்தனி குற்றச்சாட்டுகள் பாலிசி பஜார் நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த பிப்ரவரி 2024-ல் இடைத்தரகர் நிறுவனத்திற்கான உரிமம் பெறுவதற்கு முன்பு, பல்வேறு நிறுவனங்களின் காப்பீட்டுத் திட்டங்கள் பற்றிய தகவல்களை இணையதளத்தில் தொகுத்து வழங்கும், ஒரு `காப்பீட்டு வலை திரட்டியாக’ (Insurance Web Aggregators) பாலிசி பஜார் செயல்பட்ட காலத்தில் இந்த விதி மீறல்கள் நடைபெற்றுள்ளன.

பல்வேறு நிறுவனங்களின் காப்பீட்டுத் திட்டங்கள் `சிறந்தவை’ என்று அதன் இணையதளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டதாகவும், அதை நியாயப்படுத்தும் வகையில் போதிய தரவுகள் இன்றி அவை இடம்பெற்றதாகவும் ஐஆர்டிஏஐ குறிப்பிட்டுள்ளது.

ஜூன் 1 முதல் 5, 2020 வரை நடத்தப்பட்ட ஆய்வின்போது, பாலிசி பஜார் இணையதளத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட முதல் ஐந்து இன்சூரன்ஸ் திட்டங்களில் பஜாஜ் அலையன்ஸ் கோல் அஷ்யூர், எடெல்வைஸ் டோக்கியோ வெல்த் கெயின்+, ஹெச்டிஎஃப்சி கிளிக் டு வெல்த், எஸ்பிஐ லைஃப் இ-வெல்த் இன்சூரன்ஸ் மற்றும் ஐசிஐசிஐ சிக்னேச்சர் ஆகியவற்றின் திட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

அத்தகைய தரவரிசைகளைக் காண்பிப்பதன் பின்னணியில் வெளிப்படையான அளவுகோல்கள் அல்லது பொறுப்பு துறப்பு ஆகியவை இடம்பெறாததை ஒழுங்குமுறை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐஆர்டிஏஐயின் முன் ஒப்புதல் இல்லாமல், பாலிசி பஜாரின் முக்கிய நிர்வாகிகள் பிற நிறுவனங்களில் இயக்குநர்களாகப் பதவிகளை வகித்துள்ளதை இந்த உத்தரவு சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பாக, காப்பீடுகளின் பிரீமியங்களை அந்தந்த காப்பீட்டாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் செய்ததற்காக பாலிசி பஜார் நிறுவனத்திற்கு ரூ. 1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in